×

கச்சத்தீவில் மார்ச் 6, 7ல் அந்தோணியார் ஆலயத் திருவிழா: தமிழகத்தில் இருந்து செல்லும் படகுகள் ஆய்வு

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் 6, 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு செல்ல உள்ள நாட்டுப்படகுகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கச்சத்தீவில் 2 நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முதல் நாளான 6ம் தேதி மாலை 5 மணிக்கு அந்தோணியார் ஆலய வளாகத்தின் முன்பு கொடியேற்றமும், இரவில் சிலுவைப்பாதை, திருப்பலி பூஜையும் நடைபெறும். 7ம் தேதி அதிகாலை 7 மணிக்கு அந்தோணியார் பெருவிழா சிறப்பு திருப்பலி பூஜைக்கு பிறகு கொடியிறக்கம் நடைபெறுகிறது. இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாதிரியார்கள் இணைந்து திருப்பலி பூஜை நடத்துகின்றனர். இவ்விழாவில் இலங்கையை சேர்ந்த 6 ஆயிரம் பக்தர்களும், தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இவர்கள் படகில் கச்சத்தீவு செல்வதற்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 6ம் தேதி அதிகாலை 5 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 75 விசைப்படகுகள் மற்றும் 25 நாட்டுப்படகுகளில் பக்தர்கள் அனைவரும் கச்சத்தீவிற்கு புறப்பட்டு செல்வார்கள். பக்தர்கள் கடலில் பயணம் செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட படகுகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

அவர்கள், பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகளின் உறுதித்தன்மை, படகு உரிமம், உயிர்காப்பு சாதனங்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளில் சோதனை மேற்கொண்டனர்.

Tags : Antonyar Temple Festival ,Kachchativu , Kachchativu, Antoniyar Temple Festival, Boats, Study
× RELATED கச்சத்தீவு விவகாரம்.. இந்திய...