×

வேதாரண்யம் அருகே பரபரப்பு; ரூ5 கோடி ஹெராயின் கரை ஒதுங்கியது: கடலோர காவல்படை விசாரணை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பு ஹெராயின் போதை பொருள் கரைஒதுங்கியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, புஷ்பவனம் மற்றும் ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட சில மீனவ கிராமங்களில் இருந்து படகுகளில் இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதும் இதற்கு மாற்றாக இலங்கையில் இருந்து தங்கம் கொண்டு வரப்படுவதும் நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதி வேளாங்கண்ணி அருகே செருதூரில் மரப்பெட்டியில் 15 கிலோ ஹெராயின், கடந்த 1ம் தேதி வேட்டைக்காரனிருப்பு அருகே சல்லிக்குளம் கடற்கரையில்10 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலும் மரப்பெட்டி ஒதுங்கியது. மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் சென்று மரப்பெட்டியை திறந்து பார்த்தனர். அதன் உள்ளே பலகைகளை தடுப்புகளாக கொண்டு 12 அறைகள் இருந்தது. அதில் 5 அறைகளில் வெள்ளை கலரில் பவுடர் இருந்தது. இவை 5 கிலோ எடை இருந்தது. இதுவும் ஹெராயின் தான் என்றும், இதன் மதிப்பு ரூ.5 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த ஹெராயினை சுங்கத்துறை வசம் ஒப்படைக்க உள்ளனர்.

இலங்கைக்கு கடத்தி சென்ற போது நடுக்கடலில் கடலோர காவல்படை அல்லது ராணுவம் ரோந்து வந்திருக்கலாம். அதனால் கடத்திச்சென்றவர்கள் கடலில் வீசியதால் இந்த மரப்பெட்டி கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கடலோர காவல்படை சார்பில் கரை ஒதுங்கியது ஹெராயின் இல்லை என்று மறுக்கின்றனர். இதுபற்றி கடலோர காவல்படை எஸ்பி கூறுகையில், ‘‘இப்போது ஆறுகாட்டுத்துறையில் கரை ஒதுங்கிய பவுடரையும் சோதனைக்கு அனுப்ப உள்ளோம். சோதனை முடிவில் தான் அது ஹெராயினா, எந்த வகை போதை பொருள் என்பது தெரியவரும்’’ என்றார்.

Tags : investigation ,Vedaranyam ,Coast Guard ,Thrilling , Vedaranyam, Heroin, Coast Guard
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...