×

ஆன்லைனில் பவளப்பாறை விற்பனை: மரைன் இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது

ஈரோடு: ஆன்லைனில் பவளப்பாறையை விற்பனை செய்த மரைன் இன்ஜினியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் வங்காள விரிகுடா கடலில் இருந்து அரிய வகை பவளப்பாறைகள், கடல் விசிறிகள், சிலந்தி சங்கு, மாட்டு தலை சங்கு போன்றவை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கேந்திரன் தலைமையில் ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் அடங்கிய வனக்காவலர்கள் கொண்ட குழுவினர், கடந்த 3 மாதமாக ஆன்லைனில் விற்பனை செய்யும் நபர்களை பின் தொடர்ந்தனர். பின்னர், வன அலுவலர்களே ஆன்லைனில் தொடர்புகொண்டு பவளப்பாறைகள் இருந்தால் தாங்களே வாங்கி கொள்வதாகவும் அவற்றை நேரில் எடுத்து வருமாறும் கூறி உள்ளனர்.

இதையடுத்து 2 பேர், 100க்கும் மேற்பட்ட அரியவகை பவளப்பாறைகள், பச்சைக்கிளி ஆகியவற்றை அட்டை பெட்டியில் வைத்து பைக்கில் எடுத்துக்கொண்டு ஈரோடு வ.உ.சி. பார்க் அருகே வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மத்திய வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஈரோடு வனத்துறையினர் இருவரையும் பிடித்து, ஈரோடு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பாசூர் கணபதிபாளையத்தை சேர்ந்த வீர ராஜ்குமார் (24), இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த நகுலேசன் (24) என தெரியவந்தது.வீரராஜ்குமார் மரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு உக்ரைன் நாட்டில் கப்பலில் பணியாற்றியதும் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராக இருந்ததும் அவரது தாத்தாவின் ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமீபத்தில் சென்று வந்தபோது,

ஆழ்கடலில் இருந்து பவளப்பாறைகளை கடத்தி வந்து ஆன்லைனில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீரராஜ்குமார், உடந்தையாக இருந்த நகுலேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான 100க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள், கடல் விசிறிகள், சிலந்தி சங்கு, மாட்டு தலை சங்கு, கோப்பை வடிவ பவளப்பாறைகள், கடல் பஞ்சுகள், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பச்சை கிளி என அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : engineer ,Marine ,arrest , Online, coral sales, arrest
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்