×

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீசப்பட்டது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீசப்பட்டது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அண்ணா சாலை குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வெடிகுண்டு வீச்சு தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது வரை 8 பேரை பிடித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 5க்கும் மேற்பட்ட தனிப்படையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்ததாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்பதும், யார் மீது வீசப்பட்டது என்பது குறித்தும் விசாரணையானது நடைபெற்று வருகின்றது. தற்போது விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரபல ரவுடியான சி.டி.மணி, காக்காத்தோப்பு பாலாஜி ஆகியோர் காரில் வந்து கொண்டிருக்கும் போது, அவர்களை நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குவதற்காகவும், ரவுடி சம்பவம் செந்தில் என்பவர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அவரது கூட்டாளிகள் தான் காலை முதல் தொடர்ந்து அவரை கண்காணித்து இந்த நாட்டு வெடிகுண்டை வீசியதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தான் 5 தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர். நேற்று வெளியான சிசிடிவி காட்சிகளில் நாட்டு வெடிகுண்டு வீசுபவர்கள் குறித்த வீடியோ பதிவாகி இருந்தது. தற்போது புதிதாக வெளியாகி இருக்கும் சிசிடிவி காட்சியிலும், காரில் வலம் வந்து கொண்டிருக்கும் 2 ரவுடிகளை 3க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பலரும் சுற்றிவளைப்பது போன்ற காட்சி அமைந்திருக்கிறது. 2 பேர் வெள்ளை நிற உடையணிந்து அந்த காரின் பின்னரே வலம் வந்து கொண்டிருப்பதும் அக்காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது வரை இருசக்கர வாகனங்களின் எண்களை வைத்தும், அதே நேரத்தில் காரின் எண்ணை வைத்தும், தொடர்ந்து தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைக்குள் நாட்டு வெடிகுண்டு வீசியவர்களையும், தாக்குதலுக்குள்ளாக இருந்த பிரபல ரவுடி மணி மற்றும் காக்காத்தோப்பு பாலாஜி ஆகியோரையும் பிடிக்க போவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


Tags : CCTV ,bomb blast ,Chennai Anna Bridge , Chennai Anna Bridge, Bomb, New CCTV footage, release
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...