×

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: ஒருவர் பரிதாப உயிரிழப்பு!

விருதுநகர்: சிவகாசி அருகே காக்கி வாடான் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கி வாடான் பட்டியில் கே.ஆர். பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளில், 60க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தொழிலாளர்கள் அனைவரும் பணியில் இருந்த போது, சரம் பின்னுவதற்கு தேவையான வளையத்தில் முனைமருந்து செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலையில் இருந்த 3 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி குருசாமி என்கின்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் முனியாண்டி என்கின்ற மற்றொரு பட்டாசு தொழிலாளி படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் அறிந்தவுடன் சிவகாசியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளிகள் அனைவருமே ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள், விழிப்புணர்வு முகாம்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிவகாசி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பட்டாசுகள் அனைத்தும் வெயிலில் உலர்த்தும் போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிவகாசியை பொறுத்தவரையில் முழுவதும் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆலைகள் இடைவெளி விட்டு இருப்பதால் மற்ற பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags : explosion ,fireworks factory ,Sivakasi ,Virudhunagar district ,Sudden Explosion , Virudhunagar, Sivakasi, fireworks, explosion, one death
× RELATED விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில்...