×

பிரிந்த குடும்பத்தை இணைத்த டிக்டாக் செயலி: ஆந்திர மாநிலம் கர்ணூலில் நெகிழ்ச்சியான நிகழ்வு

கர்ணூல்: டிக்டாக் செயலியில் நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புற குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு டிக்டாக் செயலி குக்கிராமம் வரை சென்று அதன் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிக்டாக் செயலி சீனாவில் இருந்து வந்தது. சீன பட்டாசை விட இந்த செயலி தான் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் செயலியால் பலரது வாழ்க்கை சீரழிந்து வரும் நிலையில் அதே செயலி ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த ஒரு நிகழ்வும் நடந்துள்ளது.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்ணூல் மாவட்டம் நித்தியாலாவை சேர்ந்த குல்லையா என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் அவரது மகன் நரசிம்மலு வெளியிட்ட டிக்டாக் வீடியோ தந்தையை குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது. குஜராத்தில் வாழ்ந்து வந்த குல்லையா தனது புகைப்படத்தை வைத்து மகன் வெளியிட்ட டிக்டாக் வீடியோவை பார்த்து மனம் நெகிழ்ந்து உருகினார்.

தனது மகனை பார்த்த மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்த குல்லையா தானும் ஒரு டிக்டாக் வீடியோவை மகனுக்கு அனுப்பினார். அதுவரை தனது தந்தை இறந்துவிட்டார் என அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வந்த குடும்பத்தினர் தந்தையின் வீடியோவை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டனர். உடனடியாக குஜராத் சென்ற மகன் நரசிம்மலு தனது தந்தையை கண்ணீர் மல்க அழைத்து வந்தார். தங்களை மீண்டும் ஒன்று சேர்த்த டிக்டாக் செயலிக்கு மொத்த குடும்பமே நன்றி தெரிவித்துள்ளது.


Tags : Andhra Pradesh ,Kurnool ,event , Dictac Processor, Andhra Pradesh, Kurnool
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...