புதுச்சேரி மாநிலத்தில் புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.வி.சுப்பிரமணியம் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.வி.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதால்  அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜூலை முதல் தற்போது வரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நமச்சிவாயம் என்பவர் பதவி வகித்து வந்தார். இதுமட்டுமல்லாமல் 2016ம் ஆண்டு புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தவுடன், முதலமைச்சருக்கு அடுத்த பதவியான பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும், நமச்சிவாயமே வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ஒருவருக்கு ஒருபதவி தான் இருக்க வேண்டும். ஆனால் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இரு பதவி இருப்பதால் அவருக்கு வேலை சுமை அதிகமாக உள்ளது.

அதனால் சரிவர அவரது பணியை செலுத்த முடியவில்லை. எனவே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை வேறு நபருக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பலமுறை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் தான் நமச்சிவாயம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.வி. சுப்பிரமணியம் என்பவர் தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நமச்சிவாயம் வருவதற்கு முன்பு 8 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம், முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: