×

இஸ்லாமியர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் மாநில அரசிடம் இல்லை: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் மாநில அரசிடம் இல்லை என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என பொருந்தாத கூட்டணி அமைந்துள்ளது. எதிர் எதிர் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளதால் அன்றாடம் அந்த அரசு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதனை தொடர்ந்து, தேசியவாத காங்கிரசை சேர்ந்த சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நவாப் மாலிக், கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளதாக கடந்த 28ம் தேதி மேலவையில் அறிவித்தார். ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு குறித்து விரைவில் சட்டம் நிறைவேற்றப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று நவாப் மாலிக் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இஸ்லாமியர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், இது தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்த விஷயத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, கோரிக்கை வரும் போது அதுபற்றி பார்க்கலாம் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Tags : Uddhav Thackeray ,state government ,Muslims , Islam, Education, Reservation, Project, No, Chief Minister Uthav Thackeray
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!