×

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி..: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தகவல் தெரிவித்துள்ளார். சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மற்றும் தெலங்கானாவை சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.

இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரானா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவது குறித்து, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கொரானா பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களும், பயணிகளும் விமான நிலையங்களிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதேபோல், 12 நாடுகளிலிருந்து இந்தியா வருவோர் துறைமுகங்களிலேயே மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான தனி வார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட 28 பேரில், ஒருவர் டெல்லியை சேர்ந்தவர். 6 பேர் ஆக்ராவிலுள்ள டெல்லி நபரின் உறவினர்கள் ஆவர்.

இதுதவிர்த்து இத்தாலி நாட்டினர் 16 பேருக்கும், அவர்களது ஓட்டுநர் ஒருவருக்கும் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. விமான நிலையங்களில் இதுவரை 5 லட்சத்து 89 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். நேபாள எல்லையில் 10 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவால் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரும் ஈரான் கேட்டுக் கொண்டால் அந்நாட்டில் பரிசோதனை நிலையத்தை அமைத்து தர இந்தியா தயாராக உள்ளது, என கூறியுள்ளார்.



Tags : coroners ,Harshavardhan ,India , India, Coronavirus,Harsh Vardhan,Minister of Health,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!