×

வேலூரில் பூங்காவுக்கு தண்ணீர் பிடித்தபோது கோட்டை அகழிக்குள் கவிழ்ந்த டிராக்டர்: சூப்பர்வைசர் படுகாயம்

வேலூர்: வேலூர் கோட்டை அகழிக்குள் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சூப்பர்வைசர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அகழியை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. முதல்கட்ட பணி நிறைவு பெற்றுள்ள நிலையில் 2வது கட்ட பணி தற்போது தொடங்கி உள்ளது. அதாவது பெரியார் பூங்கா அருகே அகழியில் மேடாக உள்ள மண் திட்டை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை கோட்டை பின்புறம் பூங்கா அமைக்கும் பணிக்காக அகழியில் உள்ள நீரை பிளாஸ்டிக் பைப்கள் மூலம் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது டிராக்டர் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிராக்டரை சூப்பர்வைசர் சரத்குமார்(25) என்பவர் சற்று தள்ளி நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் நிலைதடுமாறி அருகில் உள்ள கோட்டை அகழிக்குள் தலைகீழாக கவிழ்ந்தது. டிராக்டரை இயக்கிய சரத்குமாரும் டிராக்டருடன் அகழிக்குள் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை படுகாயத்துடன் மீட்டனர்.

பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அகழியில் இருந்து டிராக்டரை கிரேன் மூலம் மீட்டனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Vellore ,Supervisor crash ,park ,Supervisor crashes , Tractor,fortress trench, park in Vellore, Supervisor crashes
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...