×

குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க ‘அமெரிக்கா டெக்னிக்’: 2 மணிநேரத்தில் பயன்படுத்தலாம்

விருதுநகர்: விருதுநகரில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை அமெரிக்காவில் உள்ளதுபோன்று சீரமைக்கும் பணி பரீட்சார்த்த முறையில் நடந்து வருகிறது. இப்படி சீரமைக்கும் சாலையை 2 மணிநேரத்தில் பயன்படுத்தலாம். 10 ஆண்டுகள் வரை சேதமடையாது என்று கூறப்படுகிறது. சாலைகளில் உள்ள குழிகளை மூடி இரண்டு மணி நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முறை விருதுநகர் நகராட்சி பகுதியில் பரிட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி சாலைகள் அமைப்பதில்லை, அதனால் 5 ஆண்டுகாலம் இருக்க வேண்டிய சாலைகள் எல்லாம் போடப்பட்ட ஒரே ஆண்டில் குண்டும், குழிகளாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற வகையில் ஆகிவிடுகின்றன. இதற்கு விருதுநகர் ரோடுகள் விதிவிலக்கல்ல. விருதுநகரில் பாதளாச்சாக்கடை திட்டம் 14 ஆண்டுகளாகியும் நிறைவடைந்த பாடில்லை. குழாய் பாதிக்க தோண்டிய ரோடுகள் எல்லாம் புதிதாக போட்டு 3 ஆண்டுகளாகாத நிலையில் குழிகளாக காட்சி தருகின்றன. இந்நிலையில் விருதுநகர் ரோட்டரி சங்கமும், சென்னை ஆர்க்ஸ் கான்கிரீட் சொல்யூசன்ஸ் நிறுவனமும் இணைந்து தொழிற்சாலை கழிவுகளை கொண்டு சாலை குழிகளை போடும் பணியை துவக்கி உள்ளன. இந்த முறையில் எம்.சாண்ட், ஜல்லி, சிமெண்டிற்கு பதிலாக கெமிக்கல் ஆலைகளில் வெளியேறும் கழிவுகள், சாம்பலை கொண்டு உருவாக்கப்பட்ட கலவை மற்றும் தண்ணீருக்கு பதில் கெமிக்கலை சேர்த்து கலவை தயாரிக்கின்றனர்.

இந்த கலவையை சாலை குழிகளில் நிரம்பி கம்பிரஸ்சர் மூலம் செலுத்தி மட்டம் சேர்க்கின்றனர். இந்த கலவை மூலம் போடப்படும் ரோடுகளை ஒன்று முதல் 2 மணி நேரத்தில் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும். இது தொடர்பாக ஆர்க்ஸ் கான்கிரீட் சொல்யூஷன்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி ஆர்.வி.ரமணி, பொறியாளர் ஜெயபால், ரோட்டரி சங்க தலைவர் ரெங்கசாமி, செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் விருதுநகரில் உள்ள பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் குழிகளை மூடும் பணியை பரிட்சார்த்த ரீதியாக மேற்கொண்டு வருகின்றனர். பொறியாளர் ஜெயபால் கூறுகையில், கெமிக்கல் ஆலை கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள சிமெண்ட் மற்றும் கெமிக்கல் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் அல்கலைடு கெமிக்கல் கலவையை தயாரித்து போடுகிறோம். ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் சாலை போக்குவரத்திற்கு தயாராகி 5 முதல் 10 ஆண்டுகள் வரை சேதமின்றி நிலைத்து நிற்கும்.
சாலை குழிகளை மேவியதும், அதில் சிமெண்ட் கான்கிரீட்டுகளுக்கு ஊற்றுவது போல் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. ஒரு சதுர அடிக்கு ரூ.50 செலவாகும். சென்னை, ஒடிசா, அமெரிக்காவில் இந்த முறையில் சாலைகள் போடப்பட்டுள்ளது. விருதுநகரில் சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 140 ச.மீ போடும் பணி நடப்பதாக தெரிவித்தார். ரோட்டரி சங்க தலைவர் ரெங்கசாமி கூறுகையில், விருதுநகரில் சாலை குழிகளை சோதனை அடிப்படையில் போடும் பணி துவங்கி உள்ளது. இதன் வெற்றியை பொறுத்து ரயில்வே பீடர் ரோடு, மேலத்தெரு சாலை குழிகளில் சாலை அமைக்கப்படும் என்றார்.

Tags : US ,roads ,pit ,dirt road , Roads, USA Technique
× RELATED அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்: தூதர் மன்னிப்பு கோரினார்