×

திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் மணல் குவியலால் போக்குவரத்து இடையூறு: வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

திருச்சுழி: திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைத்திருக்கும் மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில்  இ.சேவை மையம், ஆதார் அட்டை எடுக்கும் மையம், நில அளவைத்துறை ஆகியவை உள்ளன.  தினந்தோறும் நூற்றக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் குண்டாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வரும் லாரிகளை பிடிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள், மணலை பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில்  குவித்து வைத்துள்ளனர்.  குறிப்பாக வாகனம் நிறுத்தும் பகுதியில் மணலை குவித்து வைத்திருக்கின்றனர். இதனால் ஆதார் அட்டை எடுக்க செல்லும் வழியில் இரு சக்கர வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் ஆதார் எடுக்க செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் முதியோர்கள் மணல் குவியலால் விழும் அவல நிலை உள்ளது.  அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்தவும் வசதியில்லை.  எனவே, பறிமுதல் செய்து குவித்து வைத்திருக்கும் மணலை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாற்று இடத்தில் குவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரன்   கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட மணலால் ஏற்படும் இடையூறு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட சுமார் 300 யூனிட் அளவில் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மணலை விருதுநகரில் புதிதாக  அமையவுள்ள மருத்துவக்கல்லூரி அல்லது அரசு கட்டிடங்களுக்கு  பயன்படுத்த போவதாக மேலதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தாங்களே மணலை ஏலம் விடலாம் என உத்தரவிட்டால் உடனடியாக ஏலம் விடுவதற்கான  பணிகளை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags : office ,Tiruchi Taluk , Traffic, Taluk Office, Sand Pile, Transport
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...