×

ஈரோட்டில் ஆன்லைனில் அரிய வகை பவளப்பாறைகளை விற்க முயன்ற இன்ஜினியரிங் பட்டதாரிகள் இருவர் கைது

ஈரோடு: ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆழ்கடலில் கிடைக்கக்கூடிய அரிய வகை பவளப்பாறைகள் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற இன்ஜினியரிங் பட்டதாரிகள் 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தின் வங்காள விரிகுடா கடலில் இருந்து அரிய வகையை சேர்ந்த பவளப்பாறைகள், கடல் விசிறிகள், சிலந்தி சங்கு, மாட்டு தலை சங்கு போன்றவற்றை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதாக மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரெங்கேந்திரன் தலைமையில் ஈரோடு வனச்சரக அலுவலர் ரவிந்திரநாத் அடங்கிய வனக்காவலர்கள் கொண்ட குழுவினர், கடந்த 3 மாதமாக ஆன்லைனில் விற்பனை செய்யும் நபர்களை பின் தொடர்ந்தனர்.

பின்னர், வன அலுவலர்களே ஆன்லைனில் தொடர்பு கொண்டு பவளப்பாறைகள் இருந்தால் தாங்களே வாங்கி கொள்வதாகவும், அவற்றை நேரில் எடுத்து வருமாறும் கூறி உள்ளனர். அதன்பேரில் 2 பேர், 100க்கும் மேற்பட்ட அறிய வகை பவளப்பாறைகள், பச்சைக்கிளி போன்றவற்றை அட்டை பெட்டியில் வைத்து பைக்கில் எடுத்துக்கொண்டு ஈரோடு வ.உ.சி.பார்க் அருகே வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஈரோடு வனத்துறையினர் இருவரையும் பிடித்து, ஈரோடு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஈரோடு மாவட்டம் பாசூர் கணபதிபாளையத்தை சேர்ந்த சுப்புராஜ் மகன் வீர ராஜ்குமார் (24), இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த தனபாலன் மகன் நகுலேசன் (24) என தெரியவந்தது.

மேலும், வீர ராஜ்குமார் மரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு உக்ரைன் நாட்டில் கப்பலில் பணியாற்றியதும், தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராக இருந்ததும், இதற்கிடையே, அவரது தாத்தாவின் ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமீபத்தில் சென்று வந்தபோது, ஆழ்கடலில் இருந்து பவளப்பாறைகளை கடத்தி வந்து ஆன்லைனில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீரராஜ்குமார் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த நகுலேசன் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான 100க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள், கடல் விசிறிகள், சிலந்தி சங்கு, மாட்டு தலை சங்கு, கோப்பை வடிவ பவளப்பாறைகள், கடல் பஞ்சுகள், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பச்சை கிளி என அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் ஓட்டி வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

கவனத்தை திசை திருப்பிய குற்றவாளிகள்
கைதான வீர ராஜ்குமார், நகுலேசன் இருவரையும் மத்திய வன குற்றத்தடுப்பு பிரிவினரும், வனத்துறையினரும் மப்டியில் பிடித்து வேனில் ஏற்றி அழைத்து வந்தனர். அப்போது, பிடிபட்ட இருவரும் வேனின் கதவை திறந்து காப்பாற்றுங்கள், கடத்தி செல்கின்றனர் என கூச்சலிட்டு வனத்துறையினரின் கவனத்தை திசை திருப்ப முயன்றனர். இதைக்கேட்டு அங்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் வனத்துறையினர் சென்ற வாகனத்தை துரத்தி சென்று மடக்கினர். பின்னர் இருவரையும் காப்பற்ற முயன்றபோது, அங்கு இருந்தவர்கள் நாங்கள் வனத்துறை அதிகாரிகள் என கூறினர்.

ஆனால், போலீசார் நம்பாமல் வனத்துறையினரின் அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி செல்போன்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்னரே வனத்துறையினரை போலீசார் விடுவித்தனர். 2 பேரை பிடிப்பதற்கு முன்பே வனத்துறையினர், போலீசாருக்கு முறையாக தகவல் தெரிவித்திருந்தால் இதுபோல் நடந்திருக்காது என இருதரப்பினரும் பேசி சமாதானம் ஆகினர்.

Tags : engineering graduates , Engineering,graduates ,arrested , trying, rare corals online
× RELATED நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக...