×

முத்துப்பேட்டை அடுத்த பேட்டையில் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் தாமரைக்குளம்: சுற்றுசுவர் எழுப்பி சீரமைக்க வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறு குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தற்போது பொதுமக்கள் கண்ணில் படுவது 10க்கும் மேற்பட்ட குளங்கள்தான். அதுவும் மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் குளங்கள் மாறிவருவதால் பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களை வேதனை அடைய வைக்கிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட பேட்டையில் உள்ள தாமரைக்குளம் இப்பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் பரந்துவிரிந்துள்ளது. இக்குளத்தில்தான் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் குளித்தும் மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் அப்பகுதிக்கு நீராதாரத்தையும் பெற்று தரும் ஒரு குளமாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போதைய இந்த தாமரைக்குளத்தையும் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் குளத்திற்கு நீர் வரத்து பாதையும் தடைப்பட்டு குளம் சுருங்கி குட்டையாகி வருகிறது. மேலும் தற்போதுள்ள மிச்சம் மீதி குளத்தையும் வேலிக்கருவை, கருவேல மரங்கள் படர்ந்து குளத்தின் சிரதன்மையை கெடுத்து வருவதுடன், தண்ணீரையும் மாசுபடுத்தி வருகிறது. அதேபோல் வறட்சியால் தேங்கி கிடக்கும் தண்ணீரையும், உறிஞ்சி குளம் வரண்டு வருகிறது. சுற்றுப்புற தடுப்பு சுவர்களும் சேதமாகி ஆங்காங்கே இடிந்து விழுந்து காணப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் குளத்தின் முகப்பு பகுதியில், அதே பகுதியில் வசிக்கும் தனியார் ஒருவர் தனது வருமானத்திற்காக கோயில் என்றபேரில் குறி மற்றும் மாந்திரீகம் செய்வதற்காக குளத்தின் முக்கிய பகுதியை மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்து ஷெட் அமைத்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகமும் கண்டுக்கொள்ள வில்லை. இப்படி பலரின் ஆக்கிரமிப்பால் குளம் சுருங்கி குட்டையாக மாறிவருவதால் இந்த தாமரைக்குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புகளையும் குளத்தின் சுற்றுப்புறமும் படர்ந்து மண்டியுள்ள வேலிக்கருவை முள்மரங்களையும் அகற்றி அளித்து கரைகளை மேன்படுத்தி சுற்றுசுவர் எழுப்பி தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும் பல்வேறு அமைப்புகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே குளத்து நீரை மாசடைய செய்யும் வேலிகருவை முள்மரங்களை அகற்றியும் ஆக்கிரமிப்புகளை பாரப்பட்சம் இல்லாமல் அகற்றி இனியும் ஆக்கிரமிப்பு செய்யாமல் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுசுவர் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : interview ,Muthupetty ,The Shrinking Lotus , Muthupettai, Lotus, Circle, Emphasis
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு