×

திருச்சி ஒத்தக்கடையில் அதிகாலையில் பயங்கரம் வணிக வளாக காவலாளி தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயற்சி: மர்ம நபர்கள் அட்டூழியம்

திருச்சி: திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று அதிகாலை பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியின் தலையில் மர்ம நபர்கள் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கொள்ளை அடிக்க திட்டமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஒத்தக்கடை பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகம் உள்ளது. இங்கு செல்போன் ஷோரூம், நகைக் கடை, புத்தகம், வங்கி உள்பட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் காலை, மாலை என இரு ஷிப்டுகளாக செக்யூரிட்டிகள் பணியில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு திருச்சி அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரை சேர்ந்த காவலாளியான செந்தில்குமார்(43) பாதுகாப்பு பணியிலிருந்தார்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் வணிக வளாகத்தில் சோதனை செய்த செந்தில்குமார், பின்னர் முதல் தளத்தில் உள்ள லிப்ட் அருகே உள்ள நடைபாதையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த செந்திலின் தலையில் கல்லை போட்டது. இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த செந்தில் கூச்சலிட்டதால் அருகில் பெட்ரோல் பங்க் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியிலிருந்து செக்யூரிட்டிகள், பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது செந்தில்குமார் சட்டை பையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.500 பறித்து சென்றதுடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மர்ம நபர்கள் கல்லை போட்டதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செந்தில்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள் காவலாளியை கொன்றுவிட்டு வங்கி, நகை கடைகளில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்தார்களா அல்லது செந்தில்குமாருடன் உள்ள முன்விரோதத்தில் அவரை கொலை செய்ய முயன்றார்களா என விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த கும்பலில் எத்தனை பேர் இருந்தார்கள், அவர்கள் யார் என கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய பஸ் நிலையம், நீதிமன்றம், மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், மருத்துவமனை, வங்கிகள், பள்ளிகள் உள்ளதால் அப்பகுதியில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். பரபரப்பான இப்பகுதியில் காவலாளியை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : terrorists ,Trichy ,shopping complex ,persons , early hours ,morning,Trichy, kill ,shopping complex: Mysterious persons
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...