×

கோடை காலத்துக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: குடை, துப்பட்டாவுடன் திரியும் மக்கள்,..பகலில் நடமாட்டம் குறைந்தது

சென்னை: தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும். இந்தாண்டு பருவநிலை மாற்றத்தால், முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.  கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்திய வானிலை நிலையமும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும். இனி பனிபொழிவு இருக்காது என்று குறிப்பிட்டு இருந்தது.  இந்நிலையில் பிப்ரவரி மாத வெப்பநிலை அவ்வப்போது 90 முதல் 94 டிகிரி வரை தொட்டது.  மார்ச் மாதம் தொடங்கியும் பனிப்பொழிவு அறவே இல்லை. காலை 8 மணிக்கே சூரியன் சுட்டெரிக்கிறது. கடந்த 2 நாட்களில் 96 டிகிரி வரை வெப்பநிலை இருந்தது. குறிப்பாக நேற்று 98 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. மக்கள் பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியேவர அச்சப்படுகின்றனர்.அப்படியே வெளியே வந்தாலும் குடை, துப்பாட்டாவுடன் திரிகின்றனர். மக்கள் வாகன ஓட்டிகள், கட்டிடத் தொழிலாளர்கள், போக்குவரத்து போலீசார் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் பிசியான சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜிவ் காந்தி எக்ஸ்பிரஸ்வே, திருவான்மியூர் செல்லும் சாலைகள் பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெப்ப தாக்கம் காரணமாக போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது.
பகலில் சூட்டை தணிக்க மண்பானை நீர், குளிர்பானங்கள், பழக்கடைகளை நாடி செல்கின்றனர். இவர்களுக்கு வரமாக சாலையோரங்களில் திடீர் தர்பூசணி கடைகள், கரும்புச்சாறு, சர்பத் கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன. சிலர் குளிர்பானங்களை நாடுகின்றனர். தண்ணீர் குடிப்பதற்கு மண்பானையை பயன்படுத்துவோர் அதிகரிக்க துவங்கி உள்ளனர். அவற்றின் விலையும் விற்பனையும் அதிகரித்துள்ளது. இரவிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. வீடுகளில் நிலவும் வெப்பத்தின் தாக்கம் தெரிய துவங்கி உள்ளது. பலரும் மொட்டை மாடிகளில் தண்ணீர் ஊற்றி படுக்க துவங்கிவிட்டனர்.

மருத்துவர்கள் ஆலோசனை என்ன?
மருத்துவர்கள் கூறுகையில், ‘வெயிலின் தாக்கத்தால் நம் உடலில் நீர்ச்சத்து குறையும். தலைவலி ஏற்படும். முதியவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, மயக்கமடையும் வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு வெயிலின் காரணமாக அம்மை நோய் ஏற்படலாம்.எண்ணெய் பலகாரம், சிக்கன், மசாலா உணவுகளை அதிகமாக உட்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.  இயற்கையாக கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு அருந்தலாம். தினமும் இருமுறை குளிப்பது நல்லது’ என்றனர்.

Tags : rise ,summer season , Summer, wine, umbrella, dupatta
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி சென்னையில் மீன் விலை உயர்ந்தது