×

பசுமை பட்டாசு தயாரிப்பில் தடை செய்த ரசாயனமா? சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவகாசியில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை சி.பி.ஐ விசாரித்து கண்டறிந்து நீதிமன்றத்தில் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் குறிப்பாக பேரியம் நைட்ரேட் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று மேற்கண்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்; தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை சென்னையில் உள்ள சி.பி.ஐ  விசாரிக்க வேண்டும், அதேப்போல் பட்டாசு ஆலைகள. உச்ச நீதிமன்ற உத்தரவு விதிகளை மீறி செயல்பட்டு  பட்டாசு தயாரித்துள்ளதா என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தில் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து பட்டாசு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை  எட்டு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்,


Tags : CBI ,Supreme Court , Green Fireworks, CBI Investigation, Supreme Court
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...