×

அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் இந்து என்று உறுதிமொழி எடுக்கும் விதியை அமல்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்  பணியாற்றும் ஆணையர்கள் முதல் அனைத்து ஊழியர்களும் தான் இந்து என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விதியை 8 வாரத்தில் நடைமுறைப்படுத்துமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களில் பணியாற்றுவதற்காக இந்து சமய அறநிலையத்துறையால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள், எந்த கோயிலில் பணியாற்றுகிறார்களோ அந்த கோயிலின் மூல கடவுள் முன்பு கோயில் செயல் அலுவலர் முன்னிலையில் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்று இந்து சமய  அறநிலையத்துறையில் சட்டம் உள்ளது.

 இதுதொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கும்போது, எந்த ஒரு அதிகாரியும் இந்து என்று உறுதிமொழி எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோயில்களில் பணி நியமனம் செய்யப்படும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இந்து என உறுதிமொழி எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். உறுதிமொழி எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் கார்த்திகேயன்,  இந்து சமய அறநிலையத்துறையில் நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும்  அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என்பதால் இதுவரை இந்து என்று உறுதிமொழி எடுக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாரிகளும் இந்து என்று உறுதிமொழி எடுக்கும் விதி கடைபிடிக்கப்படும் என்றார்.  அரசு தரப்பு உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், இந்து அறநிலையத்துறை விதிகளின்படி கோயிலில் பணியாற்றும் ஆணையர் அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அனைவரும் தான் இந்து என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பதை 8 வாரங்களில் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் ஊழியர்கள் கோயிலில் இந்து என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : State Department ,High Court ,State officials , Officials, staff, Hindu, High Court
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...