×

பிளஸ் 1 தேர்வு இன்று தொடக்கம்: 8.32 லட்சம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்

சென்னை:  பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என மொத்தம்  8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 3016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7400 மேனிலைப் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை (இன்று) தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வில் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 மாணவ மாணவியரும், தனித் தேர்வர்களாக 6 ஆயிரத்து 356 பேர் என மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுகின்றனர். கடந்த மார்ச்  மற்றும் ஜூன் மாதங்களில் பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்து தற்போது பிளஸ் 2 வகுப்பில் படித்து வரும் 50 ஆயிரத்து 650 பள்ளி மாணவர்கள் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் இந்த தேர்வில் எழுதுகின்றனர். ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 3195 பேர் தற்போது பழைய பாடத்திடத்திலேயே பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக எழுத உள்ளனர்.

சென்னையில் 411 பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 46 ஆயிரத்து 770 மாணவ, மாணவியர் பிளஸ் 1 தேர்வு எழுதுவார்கள். அவர்களுக்காக 159 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியை பொறுத்தவரையில் 151 பள்ளிகளில் படிக்கும் 14ஆயிரத்து 779 மாணவ,மாணவியர் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர்.  மேற்கண்ட பிளஸ் 1 தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் 3016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்வழியில் படித்த 4 லட்சத்து 38 ஆயிரத்து 988 பேருக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தேர்வுப் பணியில் 44 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  டிஸ்லெக்சியா மற்றும் கண்பார்வை குறைபாடு, காதுகேளாதோர் வாய்பேச முடியாதவர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கும் சொல்வதை எழுதுவோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொழிப்பாடத்தில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி 3175 பேர் சலுகை பெறுகின்றனர்.

Tags : Plus 1 exam, student
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...