×

இரு அவைகளிலும் எந்த அலுவலும் நடக்கவில்லை எதிர்க்கட்சி எம்பி.க்கள் 2வது நாளாக அமளி: நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 44 பேர் பலியான சம்பவம்  தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் நேற்றும் 2வது நாளாக அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.   நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத்தின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. குடியுரிமை திருத்த  சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது நடந்த  கலவரத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்த பிரச்னையை முதல் நாளிலேயே  கிளப்பிய எதிர்க்கட்சிகள், இந்த வன்முறையை பற்றி விவாதிக்க அனுமதிக்கும்படி  வலியுறுத்தினர். மேலும், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் அமளியில் ஈடுபட்டனர்.  அப்போது, மக்களவையில் ஆளும் பாஜ. எம்பி.க்களுக்கும். காங்கிரஸ்  எம்பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.  மாநிலங்களவையிலும் இதே குழப்பம் நடந்தது.

இதனால், இரு அவைகளிலும் அலுவல்  நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு அவைகளும் நாள் முழுவதும்  ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், 2ம் நாளான நேற்று மக்களவை மீண்டும்  கூடியதும், ஆளும் கட்சி எம்பி.க்கள் மொத்தமாக வந்து, ‘வந்தே மாதரம்’ என  முழங்கினர். அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் டெல்லி  வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி அமளியில் ஈடுபட்டனர்.   அப்போது, ‘இப்பிரச்னை பற்றி பூஜ்ய நேரத்தில் பேசுங்கள். இப்போது, கேள்வி  நேரம் என்பதால் உங்கள் கேள்விகளை கேளுங்கள்,’ என சபாநாயகர் ஓம் பிர்லா  உத்தரவிட்டார். ஆனாலும், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட  எதிர்க்கட்சியினர் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று  தொடர்ந்து வலியுறுத்தினர். அப்போது, பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு,  ‘`டெல்லி வன்முறை தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ்  அவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு    இதுவரை பதிலளிக்க வில்லை,’’ என குற்றம்சாட்டினார்.

அப்போது,  எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் பிர்லாகத் ஜோஷி குறுக்கிட்டு, ‘‘டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக  எதிர்கட்சியினர் பூஜ்ய நேரத்தில் கேள்வி எழுப்பலாம். டெல்லியில் இயல்பு  நிலை, அமைதி திரும்புவதற்கே இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த  விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது,’’ என்றார். இந்த  பதிலால் சமாதானம் அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதிக்க  வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜோஷி,  ‘`விவாதம் நடத்துவது குறித்து இனி சபாநாயகர் தான் முடிவு செய்வார்,’’  என்றார்.அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் அவையை சபாநாயகர் நண்பகல் 12 மணி  வரை ஒத்திவைத்தார். பின்னர், அவை கூடியதும் எதிர்கட்சிகளின் அமளி  நீடித்தது.  அப்போது, அவையை நடத்திய துணை சபாநாயகர் கிரித் சோலங்கி,  ‘‘எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி முதியோர் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய  பிரச்னைகள் குறித்து
விவாதிக்க வேண்டியிருப்பதால் உறுப்பினர்கள்  இருக்கையில் அமர வேண்டும்,’ என்று உத்தரவிட்டார்.

அப்போதும், எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் போராட்டம் தொடர்ந்ததால், அவையை பிற்பகல் 2 மணி வரை  ஒத்திவைப்பதாக சோலங்கி அறிவித்தார். பின்னர், அவை கூடியதும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு முழக்க  மிட்டனர். அவர்களிடம், ‘‘டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பான விவாதம் ஹோலி  பண்டிகைக்கு பிறகு மார்ச் 11ம் தேதி விவாதிக்கப்படும்,’’ என்று சபாநாயகர்  ஓம் பிர்லா கூறினார். ஆனால், அமளி நீடித்ததால்அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
இதேபோல்,  மாநிலங்களவையும் நேற்று காலை தொடங்கியதும், மத்திய நிதித்துறை  இணையமைச்சர் அனுராக் தாகூர் தனது துறை தொடர்பான  ஒரு வரி அறிக்கையை  பட்டியலிட்டார். அவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு  தெரிவித்து, கிண்டல் செய்தனர். அப்போது, தாகூருக்கு ஆதரவாக வர்த்தக  அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.

இதனால், எதிர்க்கட்சி எம்பி.க்கள், ஆளும்  கட்சி எம்பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ், பாஜ.வினர் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டதால், அவையை  பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக  வெங்கையா நாயுடு அறிவித்தார். பின்னர், அவை கூடியதும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் எழுந்து,  ‘‘டெல்லியில் இயல்புநிலை திரும்பி விட்டதால், அந்த பிரச்னை பற்றி  விவாதிக்கலாம். அல்லது டெல்லியில் இயல்பு நிலை திரும்பவில்லை என அரசு  அறிவிக்க வேண்டும்,’’ என்று வலியுறுத்தினார். அப்போதும் அமளி நீடித்ததால், 3 மணி வரையும் பின்னர் நாள்முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகர் மீது பேப்பர் வீச்சு
பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோதும், எதிர்க்கட்சி எம்பி.க்களின் அமளி நீடித்தது. டெல்லி வன்முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும்,  `பாஜ ஒழிக’, `இந்தியாவை காப்பாற்று’ என முழக்கமிட்டபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து சபாநாயகரை நோக்கி காகிதங்களை கிழித்து வீசினர். இந்த அமளிக்கு இடையே, ‘வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் -2020’த்தை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் அறிமுகம் செய்தார்.

தொடர் முழுவதும் சஸ்பெண்ட் சபாநாயகர் பிர்லா எச்சரிக்கை
மக்களவையில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு,  பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். அதை கண்டித்த சபாநாயகர் ஓம் பிர்லா,  ‘‘பதாகைகளை அவைக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது. யாரும் அவைக்குள்  பதாகைகளை எடுத்து வரக் கூடாது. இதுதான் நீங்கள் பணியாற்றும் முறையா?’’ என  கேட்டார். அப்போதும் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், ‘`அமளியில் ஈடுபடும்  உறுப்பினர்கள் தங்கள் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்றால், இந்த  கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். எனவே, அவை சிறப்பாக  நடைபெற முழு ஒத்துழைப்பு தரவேண்டும்,’’ என சபாநாயகர் எச்சரித்தார்.

டெல்லியில் அமைதி திரும்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை
மக்களவையில்  டெல்லி கலவரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சர்  நித்யானந்த ராய் ேநற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  கூறியிருப்பதாவது: டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அங்கு  சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர டெல்லி போலீசார் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பீதி நிலவும் இடங்களில் 76 கம்பெனிகளை சேர்ந்த  7,600 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.  வன்முறை சம்பவம் தொடர்பாக  120 வழக்குகள் தொடரப்பட்டு 100 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை  புலனாய்வு அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் குற்றவாளிகள்  அடையாளம் காணப்படுவார்கள். சமூகவலை தளங்களில் புரளி மற்றும் தேவையற்ற  பிரசாரம் செய்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

வன்முறை பாதித்த  பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம்  நம்பிக்கையை ஏற்படுத்த போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தி வருகின்றனர்.  இதன் மூலம் அமைதியை நிலைநாட்டவும், புரளியை நம்பவேண்டாம் எனவும்  வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர உள்ளூர் அமைதி குழுக்கள்,  குடியிருப்பு நல சங்கங்கள், சந்தை நல கூட்டமைப்புகள், சமூக குழுக்கள்,  அரசியல் கட்சி நிர்வாகிகள் வன்முறை பாதித்த பகுதிகளில் கூட்டங்கள் நடத்தி  அமைதியை ஏற்படுத்தியுள்ளோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Opposition MPs ,Parliament ,MPs , Two of them, an opposition MP, Parliament
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...