×

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம்: நடிகர் கமல்ஹாசனிடம் 2.30 மணி நேரம் விசாரணை: பாதுகாப்பற்ற செட் அமைத்தது குறித்து அடுக்கடுக்கான கேள்விகள்

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் விசாரணை நடத்தினர். பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோவில் லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த 19-ம் தேதி இரவு நடந்து கொண்டிருந்தபோது, கிரேன் அறுந்து விழுந்ததில் சினிமா செட்டில் இருந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படக் குழுவைச் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த வழக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி நசரத்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.  அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி கடந்த 23ம் தேதி தனது விசாரணையை தொடங்கினார். இதுவரை கிரேன் ஆபரேட்டர் ராஜன், இயக்குனர் ஷங்கள் உள்பட 6 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், இந்தியன் 2 படத்தின் நடிகரான கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகும் படி கடந்த சனிக்கிழமை சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரியான துணை கமிஷனர் நாகஜோதி முன்பு ஆஜரானார்.

அப்போது, கமல்ஹாசனிடம் திரைப்படத்திற்கு பிரமாண்ட செட் அமைக்க உத்தரவிட்டது யார். எதை வைத்து விபத்துக்கு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தீர்கள் என்பன உள்ளிட்ட கேள்விகளை துணை கமிஷனர் நாகஜோதி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பதிலை வழக்கிற்கான வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார். இரண்டரை மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு கமல்ஹாசன் வெளியே வந்தார். நடிகர் கமல்ஹாசனிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியவர்களில் நானும் ஒருவன்
மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் பேசியதாவது: “ இந்த விபத்து தொடர்பாக நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்கள் அறிய காவல்துறை என்னை அழைத்திருந்தனர். நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களின் நானும் ஒருவன். அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது கடமை. இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன். அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஷங்கருக்கு பிரமாண்ட வரவேற்பு
கடந்த 27ம் தேதி இயக்குநர் சங்கர் விசாரணைக்கு வருவதற்கு முன்பு போலீசார் நுழைவு வாயில் முன்பு நின்று இருந்து சங்கர் வந்த உடன், அவரை அழைத்து கொண்டு உயர் அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் லிப்டில் விசாரணை அதிகாரி அறைக்கு அழைத்து சென்றனர். பிறகு விசாரணை முடிந்து உயர் அதிகாரிகள் செல்லும் வழியாக போலீசார் சங்கரை அழைத்து வந்து வெளியே அனுப்பினர். இயக்குநர் சங்கருக்கு போலீசார் காட்டிய அணுகுமுறை நடிகர் கமல்ஹாசனுக்கு கொடுக்காதது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கமல்ஹாசனை நிற்க வைத்த போலீஸ் ...
துணை கமிஷனர் அலுவலகத்தில் இந்த போலீசார் கமல்ஹாசனை சிறிது நேரம் அமருங்கள் என்று கூறினார். அதன்படி அவர் இருக்கையில் அமர்ந்தார். பிறகு 10 நிமிடங்கள் கழித்து துணை கமிஷனர் நாகஜோதி வழக்கு விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசனை உள்ளே அழைத்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது விசாரணை அதிகாரி உங்களுடன் வழக்கறிஞர் ஒருவர் உள்ளே வரலாம் என்று தெரிவித்தார். ஆனால் கமல்ஹாசன் வழக்கறிஞர் தேவையில்லை நானே விளக்கம் அளிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு வழக்கு தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

கமல்ஹாசனை 5 நிமிடங்கள் அமர வைத்த விசாரணை அதிகாரி
நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்காக நேற்று காலை 10.15 மணிக்கு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு காரில் வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 2வது மாடியில் உள்ள விசாரணை அதிகாரியான துணை கமிஷனர் நாகஜோதி அறைக்கு சென்றார். போலீசார் வழக்கமாக புகார் அளிப்போர் மற்றும் விசாரணைக்கு வரும் நபர்களை  புகைப்படம் எடுப்பது வழக்கம். ஆனால் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கான புகைப்படம் எடுக்காமல் அலுவகத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் கமல்ஹாசனை நிற்கவைத்து புகைப்படம் எடுத்து பிறகே அவரை அலுவலகத்திற்குள் அனுமதித்தார். பிறகு கமல்ஹாசன் படிவழியாக 2வது மாடிக்கு நடந்து 10.20 மணிக்கு விசாரணை அதிகாரி அறைக்கு சென்றார்.

Tags : Kamal Haasan ,filmmakers ,Indian 2 , Indian 2 , filmmakers shot dead, 3 killed, actor Kamal Haasan
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar