×

தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு?: பட்டியல் அனுப்ப ஐஜி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரத்தை அனுப்ப அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு, பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள், 40 மாவட்ட பதிவாளர்கள் அலுவலகங்கள், 11 டிஐஜி அலுவலகங்கள், 22 ஏஐஜி அலுவலகங்கள் உள்ளன. இதில் கூடுதல் டிஐஜி, ஏஐஜி, மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அலுவலக பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினர் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உதவியாளர்கள் இல்லாமல் அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அலுவலக பணியிடங்கள் காலி பணியிடம் விவரத்தை தெரிவிக்குமாறு பதிவுத்துறை தலைவர் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அலுவலங்களில் பணிப்பளுவின் அடிப்படையில் அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்பப்பட வேண்டியது தவிர்க்க இயலாத என கருதப்படும் அலுவலகங்களை பட்டியலிட்டு, அவ்வலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடம் நிரப்பப்பட வேண்டியது அவசியம் குறித்து தங்களது விரிவான அறிக்கையை உடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : office assistants ,Workplaces ,Registration Department ,IG , How much , Registration Department, Office Assistants , Workplaces? , List, IG directive
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்