×

பார்வைக்கு பயிற்சி தேவை கோஹ்லிக்கு கபில்தேவ் ஆலோசனை

புதுடெல்லி: ‘பந்தை கணிக்க வசதியாக கோஹ்லி தனது  பார்வை திறனை, நுட்பங்களை மேம்படுத்த பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்’ என்று கபில்தேவ் ஆலோசனை கூறியுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு  நியூசிலாந்து தொடர் மோசமாக அமைந்து விட்டது. அங்கு விளையாடி 4 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட்கள் என மொத்தம் 11 இன்னிங்சில் விளையாடி 218 ரன் மட்டுமே குவித்தார். அதிலும் கடைசியாக விளையாடிய 2டெஸ்ட் போட்டிகளின் 4 இன்னிங்சில் 2, 19, 3, 14 ரன் மட்டுமே எடுத்தார். ரன் குவிக்க முடியாமல் கோஹ்லி தடுமாறியது வெளிப்படையாக தெரிந்தது. ‘‘கோஹ்லி ரன் குவித்து விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு பந்து வீசினோம். ஆனால் ரன் குவிக்கும் முயற்சியில் ஏற்பட்ட தடுமாற்றத்தினால், அவர் விக்கெட்களை இழந்து விட்டார்’’ என்று நியூசி வீரர் டிரென்ட் போல்ட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமான கபில்தேவ் நேற்று, ‘30வயதை தாண்டும் போது கண்பார்வை பாதிக்கிறது. பார்வையும், கையும் ஒரே நேரத்தில் பந்தை கணிக்கத் தவறுவது நடக்கிறது. நியூசிக்கு எதிரான போட்டியில் எகிறும் பந்துகளை கோஹ்லி பவுண்டரிக்கு அடிக்க முயன்ற போது 2முறை ஆட்டமிழந்தார். எனவே  கண்பார்வையும், கையும் ஒன்றுக்கு ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பயிற்சியில் கோஹ்லி ஈடுபட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், விவியன் ரிச்சர்ஸ்ட்ஸ் உட்பட பல வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுப்போன்ற பிரச்னைகளை சந்தித்துள்ளனர். எனவே கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும் போது, அதற்கு ஏற்ப பந்தை எதிர்கொள்ளும் நுட்பங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற பயிற்சிகள் கட்டாயம். கோஹ்லி சிறந்த வீரர். அவர் பிரச்னைகளை உணர்ந்து கட்டாயம் தன்னை மேம்படுத்திக் கொள்வார். அதற்கு விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் அவருக்கு உதவியாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Kohli ,Kapil Dev , Vision, Training Needed, Kohli, Kapil Dev, Adv
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு