×

மாருதி அதிரடி திட்டம் ரூ. 5 லட்சத்துக்குள் சிறிய ரக கார்: இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும்

புதுடெல்லி: ரூ. 5 லட்சம் விலைக்குள் இரு புதிய சிறிய ரக கார்களை தயாரிக்க மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் ஒன்று 800 சிசி இன்ஜின் கொண்டது; இன்னொன்று 1 லிட்டர் இன்ஜின் கொண்டது. இரண்டாவது ரக கார் பற்றி உறுதிசெய்யவில்லை என்றாலும், முதல் ரக கார் மட்டும் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சுசூகி நிறுவனத்தின் இந்திய நிறுவனமான மாருதி தான் சிறிய ரக கார்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே, 800 சிசி இன்ஜினுடன் ஆல்டோ ரக காரையும், 1 லிட்டர் இன்ஜினுடன் செலிரோ ரக காரையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், 5 லட்சத்துக்குள் கார் வாங்க விரும்புவோர் பலரும் இருப்பதாக கணித்து, அதற்கேற்ப காரை தயாரிக்க  முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயூகவா கூறியதாவது: பல ரக கார்களை மாருதி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. புதிதாக 800 சிசி ரகத்தில் புதிய காரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. சிறிய ரக கார்களை இனி தயாரிப்பது என்பது பெரும் கஷ்டமான ஒன்று. புதிதாக கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, விலையையும் கட்டுப்படுத்த பெரும் சிரமமாக உள்ளது. இதற்கு உரிய தீர்வு கண்டு, விலையை அதிகம் ஏற்றாமல் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அயூகவா கூறினார். மாருதிக்கு போட்டியாக உள்ள ஹுண்டாய், டாடா நிறுவனங்கள் சிறிய ரக கார்கள் தயாரிப்பதை குறைத்து கொண்டு வருகின்றன. மாருதி மட்டும் சிறிய ரக கார்களை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

* 8% தான் விற்பனை
இந்தியாவில் சிறிய ரக கார்கள் விற்பனை கடந்த 2010ல் 25 சதவீதமாக இருந்தது. இப்போது 8 சதவீதமாக குறைந்து விட்டது எனினும், இந்த 8 சதவீதத்தில் மாருதி கார்கள்தான் அதிக விற்பனை ஆகியுள்ளன. ‘இரு சக்கர வாகனம் வைத்திருந்தவர்கள் பலரையும் நான்கு சக்கர வாகனத்துக்கு முன்னேற்றியது மாருதி தான்; அதனால், கண்டிப்பாக எங்களால் சிறிய ரக கார்களை அடுத்த 3 ஆண்டுகள் வரை விற்பனை செய்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இணை இயக்குனர் கவுரவ் வங்கால் தெரிவித்தார்.

Tags : Maruti, Action Plan, Rs. 5 lakhs, small car, this year end, sale
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு