×

நாடு முழுவதும் உச்சகட்ட அலர்ட் ஆக்ராவில் 6 பேருக்கு கொரோனா அறிகுறி: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடைய ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில், வுகானில் இருந்து திரும்பிய 2 மருத்துவ மாணவர்கள் உட்பட கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால், கொரோனா அச்சம் விலகிய நிலையில், இத்தாலியில் இருந்து வந்த டெல்லி மயூர் விஹார் பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவருக்கும், துபாயிலிருந்து வந்த ஐதாராபாத்தை சேர்ந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிபடுத்தப்பட்டது. இந்நிலையில், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட டெல்லி நபருடன் தொடர்பு கொண்ட ஆக்ராவை சேர்ந்த 6 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அவரது குடும்பத்தினரும் அடங்குவர். இது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவுவது இதுவே முதல் முறை.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட டெல்லி நபர் மற்றும் அவரது குடும்பத்தினர், அவருடன் தொடர்பு கொண்டவர்களிடம் 2வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில்தான் வைரஸ் தொற்று இருப்பதான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனால், உடனடியாக அந்த 6 பேரும் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 6 பேரும் யார், யாருடன் தொடர்பு கொண்டனர் என்ற பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களிடமும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். அதோடு, 6 பேரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா பரவினால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலும் அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‘டெல்லியின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 3.5 லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் கொண்ட 8,000 தொகுப்புகள் கைவசம் உள்ளது,’’ என்றார். டெல்லியில் கொரோனா பாதித்தவர் இருப்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரானோவை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் மத்திய அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

* போப்புக்கு ‘நெகட்டிவ்’
இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், வாடிகன் சிட்டியில் போப் பிரான்சிசுக்கு நேற்று திடீரென ஜலதோஷம் பிடித்தது. உடனடியாக அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், அவருக்கு பாதிப்பு இல்லை என தெரிந்தது.

* விமான ஊழியர்களுக்கு தடை
துபாயில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஐதராபாத் நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் விமானத்தில் வந்த 4 விமான ஊழியர்களும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் 14 நாட்களுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


* 2 பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பாதித்த டெல்லியைச் சேர்ந்த நபரின் மகனுக்கு சமீபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சக மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். மாணவனின் தந்தை மூலமாக ஆக்ராவை சேர்ந்தவர்களுக்கும் வைரஸ் பரவி இருப்பதால், பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவரின் மகன் படிக்கும் பள்ளி உட்பட நொய்டாவின் 2 பள்ளிகள் நேற்று திடீரென மூடப்பட்டன. பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு சந்தேகத்தின் பேரில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.

* அமெரிக்காவில் பலி 6 ஆனது
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் பரவியுள்ளது. இந்நாட்டில் இந்த வைரசால் பலியானோர் எண்ணிக்கை நேற்று 6 ஆக அதிகரித்தது. 100 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதும் உறுதியாகி உள்ளது.

* ‘அச்சப்படத் தேவையில்லை’
பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளின் அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும், கொரோனா அறிகுறி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப் படக்கூடாது. அடிக்கடி கைகளை கழுவுவது, நெருக்கமாக நின்று பேசாமல் பெரிய இடைவெளியில் நின்று பேசுவது ஆகியவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்,’ என கூறியுள்ளார்.

* தெலங்கானா இன்ஜினியருக்கு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை
தெலங்கானாவில் செகந்திராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் துபாய் சென்று வந்தபிறகு தான் கொரோனா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டது.  இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையின் 7வது தளத்தில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 10 நாட்களில் இவர் 80 பேரை சந்தித்து பேசியிருப்பது தெரிய வந்ததையடுத்து அந்த 80 பேரையும் கண்காணித்து பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் ஐதராபாத் வந்தபோது அந்த பஸ்சில் இருந்த பயணிகளையும் பரிசோதனை செய்ய  முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெலங்கானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஈட்ல ராஜேந்திரா தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மாநில அரசு சார்பில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தகவலை அமைச்சர் கூறினார். மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட உள்ளது. மேலும், ஆந்திர முதல்வ ஜெகன் மோகனும், வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் சுகாதார அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், `ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார்.

* 26 மருந்து வகைகளின் ஏற்றுமதிக்கு திடீர் தடை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பாரசிட்டமால் உட்பட 26 மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து, மருந்து மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் மருந்து உற்பத்தி குறையும் எனவும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுவான மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கூறப்பட்டது.

ஆண்டுக்கு 350 கோடி டாலர் மதிப்பிலான மருந்து மூலப்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில், 70 சதவீதம் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு 2.25 கோடி டாலர் மதிப்பிலான மருந்து மூலப்பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநர் ஜெனரல் அலுவலகம் நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், ‘26 வகையான மருந்து மூலப்பொருட்கள் மற்றும் இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இங்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாரசிட்டமால், வைட்டமின் பி1, பி6, பி12, டினிடாசோல், மெட்ரோனிடாசால், அசிகிளோவிர், பிராஜஸ்மெரோன், குளோராம்பெனிகல், ஆர்னிடாசோல், கிளைடாமைசின் சால்ட், நியோமைசின் உள்ளிட்டவை அடங்கும்.

* உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுவான மருந்து வகைகளில் 20 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
* இருப்பினும், மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தேவையில் மூன்றில் 2 பங்கு தேவைக்கு சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
* சீனாவில் கொரோனா தாக்குதலால் மருந்து மற்றும் மூலப்பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டதை அடுத்து, பாரசிட்டமால் உட்பட 26 வகை மருந்து மூலப்பொருட்கள் மற்றும் இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்துள்ளது.

* முப்படைகளுக்கும் அதிரடி உத்தரவு
கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளிலும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இங்கிருந்து வெளிநாட்டுக்கு  சென்று திரும்புபவர்களில் பலருக்கும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து, வைரஸ் பாதிப்புடன் இந்தியா வரும் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமையிடங்கள் ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தின் முப்படைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, சீன அரசும் இதைப்போன்று தான் தனியிடங்களை ஏற்படுத்தும் பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வரும் 18 முதல் 28ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த கடற்படையின் கூட்டு பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : country ,Alert Agra ,Peak Alert Agra , Agra, 6 people, Corona sign, PM Modi, Emergency
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!