×

திருவட்டாரில் நள்ளிரவு பரபரப்பு; தரமற்ற சாலை பணி தடுத்து நிறுத்தம்: பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

குலசேகரம்: திருவட்டார் அருகே உள்ள பூவன்கோடு சந்திப்பில் குமரன்குடி செல்லும் சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாகியது. இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் தண்ணீர் சரியாக வினியோகம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு உடைந்த பைப்பை சரி செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தகாரர் ஊழியர்களுடன் வந்து அந்த பகுதியில் ஜேசிபி உதவியுடன் சாலையை உடைத்து உடைந்த பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இந்த சாலை அடிக்கடி உடைந்து பள்ளம் ஏற்பட்டு வந்ததால் ஏற்கனவே அங்கு இரும்பு பைப் வைத்து சாலை அமைக்கப்பட்டிருந்தது.

உடைந்த குடிநீர் பைப்பை சரி செய்த பின்னர் சாலையின் அடியில் இரும்பு பைப் வைக்காமல் பள்ளத்தை மூட முயற்சித்தனர். இதை அங்குள்ள சிலர் கவனித்து ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் இங்கு ஏற்கனவே இருந்தது போன்று இரும்பு பைப் வைத்து தான் சாலை அமைக்க வேண்டும் என கூறினர். அப்போது அந்த வழியாக திமுக திருவட்டார் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் வந்தார். அவர்  பொதுமக்களுடன் சேர்ந்து, ஏற்கனவே இருந்தது போல் சாலையை தரமானதாக செப்பனிட வேண்டும் என கூறினார்.

அதற்கு அந்த ஊழியர்கள், தங்களிடம் தற்போது அதற்கான உதிரி பாகங்கள் இல்லை என கூறினர். பின்னர், சரி செய்த பைப்லைனில் மீண்டும் ஒழுக்கு ஏற்படுகிறதா என்பதை தண்ணீர் திறந்து விட்டு பரிசோதித்த பின்னர் தான் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். அதற்கு அந்த ஊழியர்கள் அதற்கான வால்வு எங்கிருக்கிறது என எங்களுக்கு தெரியாது என கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தினர். பைப்லைனை முழுமையாக சரி செய்து, பள்ளத்தில் இரும்பு பைப் வைத்து காங்கிரீட் கலவையால் சாலை அமைக்க வேண்டும் என கூறினர்.

இதையடுத்து ஊழியர்கள், நாளை (இன்று) இரும்பு பைப், காங்கிரீட் கலவை கொண்டு வந்து சாலை பள்ளத்தை முறையாக மூடி பணியை முடிப்போம் என எழுதி கொடுத்தனர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். நள்ளிரவு பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : mobilization ,road ,Thiruvattar , Thiruvattar, buggy road work, stopping
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி