×

சிவகாசியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்கள்: வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

சிவகாசி: சிவகாசி பகுதியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் அரசு பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகாசியிலிருந்து ரிசர்வ்லயன், திருத்தங்கல், விஸ்வநத்தம், பேராபட்டி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்கள் சேவை, கிராம மக்களுக்கு எளிதான போக்குவரத்திற்கு உதவுகிறது. ஆனால் சிவகாசி பகுதியில் சில மினிபஸ் உரிமையாளர்கள் அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கி வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து புகார் தெரிவித்தும்  நடவடிக்கை எடுப்பதில்லை.
ரிசர்வ்லயனில் இருந்து பாரதிநகர், என்ஜிஓ காலனி, மீனாட்சி காலனி, தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், சாட்சியாபுரம் வழியாக சிவகாசி பஸ் ஸ்டாண்ட்டிற்கு மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில் மட்டுமே   மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் ரிசர்வ்லயனில் இருந்து டிஎஸ்பி அலுவலகம் வழியாக நேரடியாக சாட்சியாபுரம், சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படுகின்றன. திருத்தங்கல் காகா பவுன்டரிவரை மட்டுமே மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கப்படுகின்றன. அரசு டவுன் பஸ்கள் இயங்கும் வழித்தடத்தில் மினி பஸ்கள் அனுமதியின்றி இயங்குவதால் அரசு பஸ்களுக்கு வசூல் பாதிக்கப்படுகிறது. அரசு பஸ் வரும் நேரத்தை கவனித்து பயணிகளை மினிபஸ்கள் ஏற்றி சென்று விடுகின்றன. இதனால் அரசு பஸ்கள் பயணிகள் இன்றி இயங்கி வருகின்றன. இதுகுறித்து அரசு பஸ் டிரைவர்கள் வாய்மொழி புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மினிபஸ்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மினிபஸ் உரிமையாளர்ளுக்கு ஆதரவாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினிபஸ்களை இயக்க வேண்டும், மினிபஸ் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : route ,Sivakasi ,Fun Officers , Sivakasi, mini buses, fun, authorities
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து