×

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்: தந்தை, மகளை கைது செய்தது என்.ஐ.ஏ!

ஸ்ரீநகர்: புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் தந்தை மற்றும் மகள் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் வென்ற வாகனம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமாவில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியது அடில் அகமது தார் என்ற தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் தீவிரவாதி அடில் அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கடந்த வாரம் ஷாகீர் மாக்ரே என்ற 22 வயது இளைஞரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர்.

புல்வாமா பகுதியில் மர பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த ஷாகீர், தீவிரவாதி அகமது தாருக்கு பல வகைகளில் உதவி செய்ததும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், 2018ல் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதி முகமது உமர் பரூக் மூலம் அடில் அகமது தார், ஷாகீருக்கு அறிமுகமானார் என்ற தகவலும் கிடைத்தது. ஷாகீர்தான் ராணுவத்தினர் நடமாட்டம் குறித்த தகவலை மனித வெடிகுண்டு தீவிரவாதி அகமது தாருக்கு கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இதே வழக்கில் தற்போது மேலும் இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்வாமாவை அடுத்த லெத்போரா பகுதியைச் சேர்ந்த தாரிக் அஹ்மத் ஷா(50) மற்றும் இன்ஷா ஜான் தாரிக்(23) என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் தந்தை-மகள் என்பதும் தெரியவந்துள்ளது. நேற்று இரவு முதல் அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை அவர்களைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய என்.ஐ.ஏ. அதிகாரிகள், தந்தை மகள் இருவரும் முக்கிய தீவிரவாதி அகமது தார், ஷாகீர் மாக்ரே மற்றும், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். இவர்களின் வீட்டில் தான் புல்வாமா தாக்குதல் குறித்து திட்டம் போடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின்னர் வெளியான அகமது தாரின் வீடியோவும், இவர்களது வீட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர்.



Tags : arrests ,NIA ,attack probe ,terrorists ,Pulwama Pulwama , Pulwama, Assault, Terrorists, harboured , Father Daughter, Arrest, NIA
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...