×

காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா: நாட்டு மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை...பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனாவை கண்டு அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார். சீனாவின் ஹுபெய்  மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய  கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட 70  நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் ஒவ்வொரு நாளும்  நூற்றுக்கணக்கானோர் இறந்து வந்த நிலையில், தற்போது அது  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கையும் சிறிது  குறைந்துள்ளது. அதே நேரம், உலகளவில் 88,000 பேர் இந்த வைரசால்  பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 80,000 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்  என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று, சில மாநிலங்களில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. முன்னதாக கேரளா மாநிலத்தில் மட்டும் 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புது டெல்லியில் ஒருவரும், தெலுங்கானாவில் ஒருவர் என மேலும் இரு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மேலும் அதனை தொடர்ந்து ஜெய்ப்பூரிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பேசிய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டியதில்லை என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் பலத்த சோதனைக்கு பிறகே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு துறைகளும், மாநில அரசுகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,Corona ,Nobody , Wildfire, Corona, PM Modi, Instruction
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...