×

இந்தியாவின் இறையாண்மையில் குறுக்கிடுவதற்கு வேறு எந்த வெளி அமைப்புக்கும் உரிமையில்லை : சிஏஏ விவகாரம் தொடர்பான ஐ.நா. மனு மீது மத்திய அரசு பாய்ச்சல்

டெல்லி :  ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை தொடர்ந்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையமும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனது குரலை உயர்த்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு ஒன்றை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது பரவலாக எழுப்பப்படும் குற்றச் சாட்டாகும். அத்துடன் இஸ்லாமியர்களை குறிவைத்து குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சகம்

ஆனால் இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சட்டத்தை உருவாக்குவதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மையில் யாரும் தலையிட முடியாது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்,இந்தியக் குடியுரிமை தொடர்பாக சட்டங்களை இயற்ற இந்திய நாடாளுமன்றத்துக்கு முழுமையான, கட்டுப்பாடு இல்லாத, உரிமைகள் உண்டு , இந்தியாவின் இறையாண்மையில் குறுக்கிடுவதற்கு வேறு எந்த வெளி அமைப்புக்கும் உரிமை யில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும். என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்  இந்திய அரசியல் சட்ட மதிப்பீடுகளின்படி தேவையான அனைத்தும் கொண்டதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமைந்துள்ளது. சட்டவிதிகளின் படி நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடு இந்தியா. நீதித்துறை மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை மற்றும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம்.எங்களது சட்டபூர்வமான நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறோம் எனக் கூறினார். முன்னதாக சிஏஏ சட்டம் இந்தியாவில் ஏராளமான அகதிகளை உருவாக்கும் எனக்கூறி கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.   


Tags : agency ,UN Central Government ,India ,Sovereignty of India ,The UN Central Government , Foreign Ministry, Ministry, UN Human Rights Commission, Citizenship Amendment Act
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை