×

குமாரபாளையத்தில் பரபரப்பு ஆழ்துளை கிணற்றில் இருந்து வந்த சாயக்கழிவு தண்ணீர்: மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி நேரில் ஆய்வு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளரின் வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து சாயக்கழிவுடன் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நேற்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் காலனியில் வசிப்பவர் விசைத்தறி ஜவுளி  உற்பத்தியாளர் மணி. இவரது வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று முன்தினம் நீல நிறத்தில் தண்ணீர் வெளியானது. ஆழ்துளை கிணற்றில் சாயக்கழிவு நீர்  கலந்ததால் தண்ணீர் கெட்டுப்போனதாக, அவர் புகார் தெரிவித்தார். நிலத்தடி நீர்  கெட்டுள்ளதாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன்  மற்றும் அதிகாரிகள், மணியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார். பின்னர் கிணற்றில் இருந்து தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டனர்.  தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளின் கிணற்று நீரையும், அவர் சோதனை செய்தார். அப்போது கிணற்று நீரில் உள்ள உப்பு அளவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில்  ஜவுளி உற்பத்தியாளர் மணியின் வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மட்டுமே, தண்ணீர் நீல நிறமாக மாறியது தெரியவந்தது. மற்ற கிணறுகளில் இந்த பாதிப்பு ஏதும்  இல்லை. சுந்தரம் காலனி பகுதியில் ரகசியமாக இயங்கி வந்த சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், கடந்த 10  நாட்களுக்கு முன்பு உடைத்து அப்புறப்படுத்தினர். இருந்த போதிலும்  மணியின் கிணற்றில் மட்டும் தண்ணீர் நிறம் மாறியது குறித்து அதிகாரிகள்  தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிணற்று நீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

Tags : inspection ,pollution control officer ,Kumarapalayam , Sewage water ,Parambathil,deep well ,Kumarapalayam
× RELATED சிட்டு குருவிகளுக்கு உணவு அளிக்க மாணவிகள் உறுதி