×

உத்தமபாளையம் பகுதியில் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலங்கள், நீரோடைகள் அழிப்பு: விவசாயிகள் புகாரால் பரபரப்பு

உத்தமபாளையம் :நான்குவழிச்சாலைதிட்ட பணிகளுக்காக உத்தமபாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், நீரோடைகள் அழிக்கப்படுவதாக விவசாயிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். உத்தமபாளையம் பென்னிகுயிக் நர்சரி கார்டன் முதல் அனுமந்தன்பட்டி வரை, நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக விவசாய நிலங்கள் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக இப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகளின்போது கட்டப்பட்ட சிறு பாலங்களுக்காக, பல நீரோடைகள், வரத்து கால்வாய்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லையென விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

உத்தமபாளையம் தெற்குபரவில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் நீரோடைகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், நான்குவழிச்சாலை திட்ட அதிகாரிகள் கண்டும்காணாமல் உள்ளனர். இதனால் தெற்குபரவில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாது. மறுபுறம் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள், உழுவதற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சாலை அமைக்கும் இரண்டுபுறமும் 10 அடிக்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து தெற்குபரவு விவசாயிகள் சங்க தலைவர் முகமதுராவுத்தர் கூறுகையில்,
‘‘நீரோடைகளை அழித்து 10 அடி பள்ளம் இருபுறமும் நான்குவழிச்சாலைக்காக தோண்டப்படுகிறது. 2 கிமீ தூரத்தில் தோண்டும்போது வயல்களுக்கு எப்படி செல்ல முடியும். இதனால் வயல்களுக்கு உத்தமுத்து கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்தாலும் வராது.

தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் கால்நடைகளை இங்குள்ள வயல்களுக்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லமுடியாது. 500 ஏக்கர் நிலங்கள் பாழ்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்’’ என்றார்
விவசாயி பரீத்கான் கூறுகையில், ‘‘நான்குவழிச்சாலையால் ஏற்கனவே மேடான வயல்களுக்கு தண்ணீர் வராத நிலை உள்ளது. இரண்டுபக்கமும் 10 அடி பள்ளத்தை பொக்லைன் மூலம் தோண்டி மறுபடியும் மொத்தத்திற்கு விவசாயத்தை அழிக்கப் பார்க்கின்றனர். தற்போது தண்ணீர் இல்லாவிட்டாலும் இந்த பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்க்க கொண்டு செல்ல முடியாது’’ என்றார்.

கலெக்டரின் கனிவான கவனத்துக்கு...
நான்கு வழிச்சாலைக்காக விளைநிலங்களின் ஓரம் பள்ளங்கள் தோண்டும்போது, பாசனத்திற்கு சரியான முறையில் தண்ணீர் சென்று சேராது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே, எனவே கலெக்டர் தலையிட்டு விவசாய பாதிப்புகளை கண்டறிவதுடன், விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய சிறு நீரோடை, கால்வாய்களை மீண்டும் அமைந்திட நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* உத்தமபாளையம் பகுதியில் நான்குவழிச்சாலை திட்டத்திற்காக வயலோரங்களில் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன.

Tags : lands ,streams ,Uthamapalayam ,land , Destruction ,land and streams,four-lane road , Uthamapalayam,Farmers complain
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...