×

பருவநிலை மாற்றத்தால் வடுவூர் ஏரி சரணாலயத்தில் வெளி நாட்டு பறவைகள் வருகை குறைவு: கணக்கெடுப்பில் தகவல்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் 316ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டமான வடுவூர் ஏரியில் தமிழக வனத்துறை சார்பில் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வடுவூர் ஏரியில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிகளவில் இருப்பதால் எந்த நேரமும் இங்கு ரம்யமான சூழல் நிலவும். அதனால் இங்கு பறவைகள் ஆர்வத்துடன் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது. மேலும் பறவைகளுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது.இதனால் வடுவூரில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் 38 வகையான 2 லட்சம் பறவைகளை வடுவூர் ஏரி வெகுவாக ஈர்க்கிறது. இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொறித்து பின்னர் ஏப்ரல் மாதம் முதல் தங்களின் நாடுகளுக்கு மீண்டும் பறந்து செல்கிறது.

இந்நிலையில் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் நடப்பாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி, மன்னார்குடி வனச்சரகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் துவங்கின.திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் வன உயிரியல் விஞ்ஞானி டாக்டர் குமரகுரு தலைமையில் 38 மாணவ மாணவியர்கள் மற்றும் தமிழகம் முழுவதில் இருந்து ஆர்வலர்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.கணக்கெடுப்பின் முடிவில், தற்போது வடுவூர் ஏரியில் ஆயிரக்கணக்கில் பறவைகள் குவிந்திருந்தாலும் உலகளாவிய பருவநிலை மாற்றம் காரணமாக கடந்தாண்டை விட இந்தாண்டு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வன உயிரியல் விஞ்ஞானி டாக்டர் குமரகுரு கூறுகையில், மத்திய ஆசியா, ஐரோப்பா, வடக்கு ஆசியா, கஜகஸ்தான், ஆப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள பறவைகள் நில பறவைகள், நீர் பறவைகள் என 2 வகைகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின் போது 48 வகையான நீர் பறவைகள், 70வகையான நிலப்பறவைகள் என மொத்தம் மொத்தம் 118 வகைகளை சேர்ந்த 14 ஆயிரத்து 443 பறவைகள் மட்டுமே இந்தாண்டு வடுவூருக்கு வந்துள்ளது தெரிகிறது. இதில் 27 வகையான அயல் நாட்டு பறவைகள் வந்துள்ளது.

குறிப்பாக புள்ளி மூக்கு வாத்து, ஊசி வாய் வாத்து, வெள்ளை அறிவால் மூக்கன், குள்ளதார, பணங்கொட்டை சிறவி, அகல வால் சிறவி, நெடுங்கால் உள்ளான் என்கிற பவழக்கால் உள்ளான் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் இந்தாண்டு வந்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அதிகளவில் வந்த தட்டை வாயான், துடுப்பு வாயன், முக்குளிப்பான், மண் கொத்தி பறவை உள்ளிட்ட பல பறவைகள் இந் தாண்டு மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வந்துள்ளது. அதே சமயம் சென்ற ஆண்டு வந்தரப், வரித்தலை வாத்து, செங்கால் நாரை, பூ நாரை, கூழை கிடா போன்ற பறவைகளின் வரத்து இந்தாண்டு முற்றிலும் இல்லை. மேலும் வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்தாண்டு வந்த பறவை இனங்களில் 5 முதல் 8 சதவீத வரத்து இந்தாண்டு குறைந்துள்ளது. அதே போல் இந்தாண்டு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் 35 முதல் 40 சதவீதம் வரை கடந்தாண்டை விட பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியா உள்ளிட்ட உலகளா விய அளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கிறது என்றார்.

* கடந்தாண்டு வந்த வரித்தலை வாத்து, செங்கால் நாரை, பூ நாரை, கூழை கிடா போன்ற பறவைகளின் வரத்து இந்தாண்டு முற்றிலும் இல்லை. மேலும் வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்தாண்டு வந்த பறவை இனங்களில்
5 முதல் 8 சதவீத வரத்து இந்தாண்டு குறைந்துள்ளது.

* திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஏரியில் ரம்யமான சுழலில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து குவிந்துள்ள அரிய வகை பறவைகள்.



Tags : Foreign Bird Visitors , Reduced Visit, Foreign Bird Visitors , Vadavur Lake Sanctuary,Climate Change,Survey
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...