×

ஒரே நேரத்தில் தலா 4 பேர் வீதம் செல்ல முடியும் சோளிங்கர் மலைக்கோயிலுக்கு ரோப்கார் 3 மாதங்களில் ஓடும்: அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி

வேலூர்: சோளிங்கர் மலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான ரோப் கார் வசதி 3 மாதங்களில் கிடைக்கும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 448 மீட்டர் உயரமுள்ள செங்குத்தான மலை மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு செல்ல 1380 படிகளை கடந்து பக்தர்கள் செல்ல வேண்டும். இக்கோயிலுக்கு மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், நோயாளிகள், பெண்கள் ஆகியோர் சென்று தரிசனம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலை போன்று சோளிங்கர் மலைக்கோயிலுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதற்கேற்ப கடந்த 2011ம் ஆண்டு சோளிங்கர் மலைக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து  ₹6 கோடியில் ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த நிதியில் ஒரு பகுதியை பழனி தண்டாயுதபாணி கோயில் நிதியில் இருந்து கடனாகவும், மீதியை பக்தர்களிடம் இருந்து நன்கொடையாகவும் பெற்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ₹8.27 கோடியில் சோளிங்கர் மலைக்கோயிலுக்கு ரோப்கார் அமைக்கும் பணி தொடங்கியது. பின்னர் இப்பணி ₹9.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேகமெடுத்தது. ரோப்கார் அமைக்கும் பணியை டெல்லியை சேர்ந்த ரைட்ஸ் நிறுவனம் எடுத்து செய்து வருகிறது.

இப்பணியை விரைந்து முடித்து ஒப்பந்தகாலமான மார்ச் 2020க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஆய்வின்போது உத்தரவிட்டார். அதன்படி தற்போது 97 சதவீத பணிகள் முடிவடைந்து ரோப்கார் செல்லும் பாதைக்கான ரோப் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.இப்பணி இம்மாத இறுதிக்குள் முடிந்து, அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், அதன்பிறகு தகுதிச்சான்று வழங்கப்பட்டு முறையாக ரோப் கார் இயங்க தொடங்கும் என்றும், எனவே, அடுத்த 3 மாதங்களில் கண்டிப்பாக சோளிங்கர் மலைக்கோயிலுக்கு ரோப் கார் இயக்கம் தொடங்கப்பட்டு விடும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோப்கார் அமைக்கப்படுவதன் மூலம் தலா 4 பேர் என ஒரே நேரத்தில் 4 ரோப்கார்கள் மூலம் 16 பேர் மலைக்கு செல்லலாம். இவ்வாறு ஒரு மணி நேரத்தில் 400 பேர் மலைக்கோயிலுக்கு செல்ல முடியும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் வரை ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். இதனால் கோயிலுக்கு வரும் வெளியூர், வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரிப்பதுடன், கோயிலுக்கு வருவாயும் அதிகரித்து, சோளிங்கரில் சுற்றுலா மூலமான வருவாயும் அதிகரிக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Sholingar Temple ,ROBKAR ,State Department ,Ropar ,The Sholingar Temple , Ropar , Sholingar Temple,3 months , 4 people each.
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...