பெரணமல்லூரில் ஆபத்தான நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவர்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரணமல்லூர்:  பெரணமல்லூர் பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரணமல்லூர் பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கால்நடைக்கு சிகிச்சை அளிக்க அழைத்து வருகின்றனர். இங்கு நாள்தோறும் செயற்கை கருவூட்டல், தடுப்பூசி மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவிர தற்போது கோமாரி நோய் தடுப்பு ஊசி போடுவதற்கும் நாள்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையின் நுழைவுவாயிலில் உள்ள சுற்றுச்சுவர் மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.

குறிப்பாக சுற்றுச்சுவரின் நுழைவுவாயில் பகுதியில் இரும்பு கேட் அமைந்துள்ளதால் கேட்டின் மீது கால்நடைகள், பொதுமக்கள் யாராவது எதிர்பாராதவிதமாக வேகமாக மோதும் நேரத்தில் சுற்றுச்சுவருடன் கேட் சரிந்து விழுந்தால் பெரிய விபத்து நடக்க வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் கால்நடைகளை மருத்துவனையின் உள்ளே நுழையும்போது பயத்துடனே சுவற்றின் மேல் மோதாமல் ஒதுங்கி செல்கின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச் சுவரினால் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>