×

திருமங்கலம் கூட்டுறவு சங்கத்தேர்தலில் அதிமுக - அமமுக பயங்கர மோதல்

* வாக்குவாதம்; நாற்காலிகள் சூறை
* 5வது முறை தேர்தல் ஒத்திவைப்பு

திருமங்கலம்: திருமங்கலம் புதுநகர் கூட்டுறவு சங்க தேர்தலில், அதிமுக - அமமுகவினரிடையே மோதலால் நாற்காலிகள் சூறையாடப்பட்டன. இதையடுத்து ஐந்தாவது முறையாக தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் புதுநகரில் கூட்டுறவு சங்கம் (ஏ 1998) உள்ளது. இச்சங்கத்தின் தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த அழகர்,  முன்னாள் ஊராட்சி தலைவர் நிரஞ்சன் போட்டியிட்டதால் கோஷ்டிமோதல் ஏற்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நிரஞ்சன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மாறினார். கூட்டுறவு சங்கத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் டிஎஸ்பி அருண் தலைமையில், கூட்டுறவு சங்கம் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரி கோபி தலைமையில், காலை 10 மணியளவில் அதிகாரிகள் மனுக்களை வாங்க தயாராக இருந்தனர்.

துணைத்தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த சரண்யா மனுதாக்கல் செய்தார். தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் அழகர், அமமுக சார்பில் முருகன் போட்டியிட்டனர். முதலில் முருகன் மனுதாக்கல் செய்தார். இவருக்கு  முன்னாள் நகராட்சி தலைவர் நிரஞ்சன் ஆதரவு தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த அழகர், தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அலுவலகத்தில் இருந்த விண்ணப்படிவங்களை தூக்கி எறிந்தனர்.  ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, கூட்டுறவு சங்கத்திலிருந்த நாற்காலிகள் வீசி எறிந்து உடைத்தனர்.

இதையடுத்து டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார், கூட்டுறவு சங்கத்திற்குள் வந்து, இரண்டு தரப்பினரையும் அமைதிப்படுத்தி, அனைவரையும் வெளியேற்றினர். பின்னர் மறுதேதி குறிப்பிடப்படாமல் 5வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கோபி தெரிவித்தார். இதுதொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்தச் சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : AIADMK - AMUKAMA ,clash ,election ,Thirumangalam ,AIADMK , AIADMK ,AMUKAMA clash , Thirumangalam ,co-operative election
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...