×

டெல்டா பகுதியில் கோடை காலத்திற்கு ஏற்ற வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

கோடை காலத்தில் விவசாயிகள் பல்வேறு பணப் பயிர்களை சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வந்தாலும் குறைந்த நாளில் அதிக லாபம் தரும் பயிராக உள்ள வெள்ளரியை சாகுபடி செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். படரும் கொடி வகையை சேர்ந்த வெள்ளயின் தாயகம் இந்தியா தான். 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தாவரமான வெள்ளரி இப்போது உலகின் பல இடங்களில் விளைவிக்கப்படுகிறது. கோடை காலம் வந்து விட்டதால் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது வெள்ளரியாகத்தான் இருக்கும். வெயிலின் தாக்கத்தில் தாகம் ஏற்படும் போது, பயணங்களில் தாகத்தை தீர்க்கும் அரிய மருந்தாக வெள்ளரி இருப்பதால் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் அதிகம் விற்கும் பொருளாக வெள்ளரி தான் இருக்கும். வெள்ளரியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகான், குளோரின் உள்ளிட்ட சத்துகள் இருப்பதால் வெள்ளரி பல மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது.

இது பல ஆபத்தான நோய்களை வராமல் தடுக்கிறது. மேலும் சிவப்பு ரத்தணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இன்சுலினை சுரக்கச் செய்யும் கணைய செயல்களுக்கு வளர்ச்சி ஊக்கியை கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளரி சிறந்த மருந்தாக இருந்து வருகிறது. தினம் வெள்ளரி சாப்பிட்டால் நச்சுகளை அகற்றி போதுமான நீர் சத்துகளை தக்க வைத்தும் அவசியமான வேலையை அந்த ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. வெள்ளரி காயில் 95 சதவீதம் நீர்சத்து இருப்பதால் உடலில் தங்கும் தீய நச்சுகளை எல்லாம் சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. அதன் மூலம் உடல் சருமம் பாதுகாக்கப்படுகிறது. வாய் துர்நாற்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வாயில் உண்டாகும் கிருமிகளை அழித்து ஈறுகளை பலப்படுத்தி வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. தினமும் வெள்ளரி சாப்பிட்டு வந்தால் உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. தேவையற்ற கலோரிகளை குறைத்து எடை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு வயிற்றில் உள்ள கொழுப்பையும் கரைக்கிறது.

வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மை உள்ளதால் உடலில் உள்ள வெப்பத்தை சமப்படுத்துகிறது. செரிமான பிரச்னை உள்ளவர்களும் வெள்ளரி சாப்பிடுவதன் மூலம் ஜீரண சக்தியை பெறலாம். மேலும் மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. தினமும் 2 வெள்ளரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.இத்தகு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெள்ளரி சாகுபடி தரங்கம்பாடி பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது. தரங்கம்பாடி பகுதி மணல் சார்ந்த பகுதி என்பதாலும், குறைந்த நாளில் அதிக லாபம் ஈட்டும் தாவரமாக வெள்ளரி இருப்பதாலும் விவசாயிகள் இந்த கோடை காலத்தில் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயி சிங்கனோடை சிங்காரவேலு சாகுபடி முறை குறித்து கூறியதாவது:கோடைப் பட்டத்தில் நல்ல வருமானத்தை தரக்கூடியது வெள்ளரி சாகுபடி. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றதாகவும் உள்ளது. வெள்ளரி சாகுபடி செய்ய மணல் சார்ந்த நிலம் அல்லது இரு மணல் சார்ந்த நிலம் ஏற்றதாகும். அந்த நிலத்தில் தேவையான அளவுக்கு குழி அமைத்து குழியில் தொழு உரமிட்டு குழிக்கு 3 முதல் 5 விதைகளைப் போட்டு மூடிவிட வேண்டும். அந்த செடி வளர்ந்து பூக்கள் பிடித்து வெள்ளரி காய்க்கத் தொடங்கும்.

விதை விட்ட 40 நாளிலிருந்து 80வது நாட்கள் வரை தினமும் வெள்ளரிகளை பறித்து விற்பனை செய்ய முடியும். இயற்கை சீற்றங்கள் இல்லாத வரை எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தோட்டக்கலை எங்களுக்கு உதவி செய்யவில்லை. கோயில் சாகுபடி நிலம் என்பதால் எங்களால் எந்த உதவியும் பெற முடியவில்லை. அரசு எங்களை போன்ற ஏழை விவசாயிகளை கருத்தில் கொண்டு கோயில் நிலத்தில் சாகுபடி செய்யும் எங்களுக்கும் மானிய விலையில் உரம், பூச்சி மருந்துகளை வழங்க வேண்டும். வெள்ளரி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவாகிறது. நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 1 டன் வெள்ளரி கிடைக்கும். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களே இதில் ஈடுபடுவதால் ஓரளவு லாபம் கிடைக்கிறது என்று கூறினார்.

* வெள்ளரி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவாகிறது.
* நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 1 டன் வெள்ளரி கிடைக்கும்.

Tags : region ,Delta , Farmers' intensity, summertime cucumber, cultivation ,Delta region
× RELATED வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி