×

பெரும்பான்மை கிடைக்காததால் இஸ்ரேலில் ஒரு ஆண்டுக்குள் மூன்றாவது பொது தேர்தல்: இன்று முடிவு தெரியும்

ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் நடந்த 2 பொது தேர்தல்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதால், நேற்று 3வது முறையாக அங்கு பொது தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியாகும். இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடந்தது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 120 இடங்களில் 61ல் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும். இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி, எதிர்த்து போட்டியிடும் ‘ப்ளூ அண்ட் ஒயிட்’ கட்சியின் தலைவரும் முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னி கன்ட்ஸ் ஆகியோர் தலா 35 இடங்களை கைப்பற்றினர். இவர்கள் மற்ற கட்சியினருடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்தாண்டு செப்டம்பரில் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் ஆளும் லிகுட் கட்சி 32 இடங்களையும், ப்ளூ அண்ட் ஒயிட் 33 இடங்களையும் பிடித்தது. ஆனால் 2வது முறையாக கூட்டணி அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால் அங்கு  3வது முறையாக நேற்று பொது தேர்தல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் வரலாற்றில் இதுபோல் ஓராண்டுக்குள் 3வது முறையாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது இல்லை. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 64 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க 10,631 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் முடிவுகள் இன்று காலை வெளியாகும். இந்த தேர்தலில் லிகுட் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பே கருத்து கணிப்பு தகவல்களை வெளியிட்டு தேர்தல் சட்ட விதிமுறைகளை பிரதமர் நெதன்யாகு மீறிவிட்டார் என மத்திய தேர்தல் குழுவில், அட்டர்னி சாச்சர் பென் மெர் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் சில கருத்துக் கணிப்புகள், இந்த தேர்தலிலும், லிகுட் கட்சி 61 இடங்களை பிடிக்க முடியாது என கூறியுள்ளது.

Tags : Israel ,election , Majority, Israel, general election
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...