×

கார் விற்பனை பிப்ரவரியிலும் சரிவு: கொரோனாவால் உற்பத்தியும் பாதிக்க வாய்ப்பு

புதுடெல்லி: கார் விற்பனை கடந்த பிப்ரவரி மாதமும் சரிவை சந்தித்துள்ளது.  பொருளாதார மந்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று.  இதுவரை இந்த துறையில் சுமார் 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வாகன விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதத்திலும் வாகன விற்பனை சரிந்துள்ளது. இதுகுறித்து நிறுவனங்கள் வெளியிட்ட பிப்ரவரி மாத வாகன விற்பனை புள்ளி விவரங்களின்படி, மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன விற்பனை 1.1 சதவீதம் சரிந்து 1,47,110 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் கார்கள் விற்பனை 10.3 சதவீதம். சரிந்துள்ளது. 48,910 கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் விற்பனை 33.6 சதவீதம் குறைந்துள்ளது. 38,002 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இதுபோல் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 42 சதவீதம் சரிந்துள்ளது. 32,476 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.  பொருளாதார மந்த நிலை மட்டுமின்றி, கொரோனா வைரஸ் வாகன விற்னை சரிவுக்கு கூடுதல் காரணமாகி விட்டது என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுகையில், ‘‘பொருளாதார மந்த நிலையால் வாகன விற்பனை தொடர்ந்து மந்த நிலையில் காணப்படுகிறது. அதோடு, கொரோனா வைரசால் வாகன துறையில் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. பிஎஸ் 6 தர வாகனங்கள் அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சந்தைக்கு வர உள்ளன. இதை கருத்தில் கொண்டு மக்கள் வாகனம் வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்துள்ளனர். இருப்பினும், நஷ்டத்தை ஈடுகட்ட உற்பத்தியை குறைத்ததோடு, தள்ளுபடி சலுகைகளையும் வெகுவாக குறைத்துள்ளோம். அதேநேரத்தில், சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் வாகன பாகங்கள் இறக்குமதி தடை பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டு, மீள்வது கடினம் ஆகிவிடும்’’ என்றனர்.

Tags : Car sales, decline, Corona
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...