×

பொருளாதார மந்தநிலையால் முடக்கம் 10.52 லட்சம் கோடி வராக்கடனாகும் அபாயம்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: பொருளாதார மந்தநிலை காரணமாக, பெரு நிறுவனங்களின் 10.52 லட்சம் கோடி கடன் வராக்கடனாக மாறும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கிய பொருளாதார மந்த நிலை இன்னும் நீடித்து வருகிறது. பல்வேறு தொழில் துறைகள் முடங்கி கிடக்கின்றன. மத்திய புள்ளியியல் அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.7 சதவீதம் என தெரிவித்திருந்தது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத சரிவாக பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் பொருளாதார மந்தநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி துறை, ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி துறை, தொலைத்தொடர்பு துறை, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்ட துறைகளில்தான் நெருக்கடி அதிகமாக உள்ளது.

இந்த துறை பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களில், 16 சதவீதம் வராக்கடன்களாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் வாங்கிய 10.52 லட்சம் கோடி கடன் வராக்கடனாகும் நிலை ஏற்படும். ஏற்கெனவே உள்ளதை விட நிதி மற்றும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள 500 தனியார் நிறுவனங்களின் தற்போதைய கடன் மற்றும் சொத்து மதிப்பு ஆகியவற்றை கொண்டும், எதிர்கால பொருளாதார வளர்ச்சி கணிப்பையும் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதிலும் மேலும் 2.54 லட்சம் கோடி கடன்கள் வராக்கடன்களாக மாறக்கூடும்.

வரும் 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேலும் மந்தம் அடைந்தால், நிறுவனங்கள் கடனை திரும்பி செலுத்த முடியாத நிலை மேலும் 1.59 சதவீதம் அதிகரிக்கும். ஒரு வேளை பொருளாதார வளர்ச்சி 2021-22 நிதியாண்டில் 7 சதவீதமாக உயர்ந்தால், வராக்கடனாக மாறும் அபாயம் 0.87 சதவீதம் குறையும். இப்போதே, பல பெரு நிறுவனங்கள், வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றன. இவற்றில் பலவற்றை கடனை திரும்பி செலுத்த தவறிய நிறுவனங்கள் என வங்கிகள் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், மேலும் கடன்கள் வாங்குவதும் இந்த நிறுவனங்களுக்கு சாத்தியமில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Recession , The economic recession, straw
× RELATED உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிர்மலா சீதாராமன் உரை