×

7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து

கிறைஸ்ட்சர்ச்: இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. கடந்த ஜனவரி மாத இறுதியில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கிய இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று ஒயிட்வாஷ் சாதனை படைத்தது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என வென்று பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்திய நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் பிப். 29ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச, இந்தியா முதல் இன்னிங்சில் 242 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பிரித்வி, புஜாரா, விஹாரி அரை சதம் அடித்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேமிசன் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சில் ஷமி 4, பூம்ரா 3, ஜடேஜா 2, உமேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்திருந்தது. விஹாரி 5 ரன், பன்ட் 1 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். விஹாரி 9 ரன், பன்ட் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 97 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தவித்தது.

முகமது ஷமி 5 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் பிளண்டெல் வசம் பிடிபட்டார். பூம்ரா 4 ரன் எடுத்து ரன் அவுட்டாக, இந்தியா 2வது இன்னிங்சில் 124 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (46 ஓவர்). ஜடேஜா 16 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட் 4, சவுத்தீ 3, கிராண்ட்ஹோம், வேக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் லாதம், பிளண்டெல் இருவரும் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்து, இந்திய அணியின் நம்பிக்கையை அடியோடு தகர்த்தனர். லாதம் 52 ரன் (74 பந்து, 10 பவுண்டரி) விளாசி உமேஷ் வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 5 ரன்னில் வெளியேற, பிளண்டெல் 55 ரன் (113 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பூம்ரா வேகத்தில் கிளீன் போல்டானார்.

நியூசிலாந்து அணி 36 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து வென்றது. டெய்லர், நிகோல்ஸ் தலா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 2, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அந்த அணியின் கைல் ஜேமிசன் ஆட்ட நாயகன் விருதும், டிம் சவுத்தீ தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.  இந்த வெற்றியால், அணிகளுக்கான ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் நியூசிலாந்து அணி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.


Tags : India ,New Zealand ,Test , Test Series, India, Whitewash, New Zealand
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...