×

கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகரில் பார்க்கிங் பகுதியாக மாறிய பஸ் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனை கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகர், சக்தி நகர், கிழக்கு பானு நகர், திருமலைப்பிரியா நகர், பாரத ரத்னா ராஜிவ்காந்தி நகர், திருத்தணி நகர், இந்திரா நகர், வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.  குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் தினசரி இங்கு வந்து, பஸ் பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு, பயணிகளின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நவீன நிழற்குடை அமைத்தது. இதை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். இந்த பஸ் நிறுத்தம் அருகில் தனியார்  நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பார்க்கிங் வசதி இல்லாததால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை இந்த பஸ் நிறுத்த நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தி வருகின்றனர்.

இதனால், பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பஸ்சுக்காக கடும் வெயிலில் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும், இந்த நிழற்குடையை சுற்றி ஓட்டல்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுறது. மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இரவில் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்னர். எனவே, பஸ் நிறுத்த பகுதியில் பைக்குகள் நிறுத்துவதை தடுக்க வேண்டும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், என இப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.



Tags : Kallikkuppam West Balaji Kallikuppam West Balaji , Kallikuppam, West Balaji Nagar, Parking area, Bus parking
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100