×

தமிழக அமைச்சர்கள் திடீர் டெல்லி பயணம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தங்கமணி, ஜெயக்குமார் சந்திப்பு: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்?

சென்னை: மத்திய பாஜ அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் 46 பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். தமிழகத்திலும் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டம் நடக்கிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். ஆனாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த சட்டத்தால் தமிழகத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார். ஆனாலும், இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

அதேநேரம் சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டம்), என்பிஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு), என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதையடுத்து தமிழக அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் இக்கட்டான நிலைக்கு அதிமுக அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மதியம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி சென்ற தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு தமிழக அமைச்சர்கள் யாரும் நிருபர்களை சந்திக்கவில்லை. திடீரென தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வருகிற 9ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அனுமதி கேட்கத்தான் தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றனர் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம், இந்த சந்திப்பின்போது தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Tags : Amitesha ,Jayakumar ,Thangamani ,trip ,Delhi ,Ministers , Thangamani, Jayakumar meet Home Minister Amitesha on sudden trip to Delhi Ministers: Resolution on the Civil Rights Amendment Act?
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...