×

மக்களவையில் பெண் எம்.பி.க்களிடம் அத்துமீறல் பாஜ, காங்கிரஸ் மாறி மாறி புகார்

புதுடெல்லி: மக்களவையில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அப்போது பாஜ எம்பிக்களும் காங்கிரஸ் எம்பிக்களும் மாறி, மாறி தள்ளிவிட்டுக் கொண்டனர். இந்நிலையில் தன்னை  பாஜ பெண் எம்பி தாக்கியதாக கேரளாவின் ஆலத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ரம்யா ஹரிதாஸ், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளித்தார். அதில், ‘மக்களவையில் பிற்பகல் 3 மணியளவில் ராஜஸ்தான் பாஜ பெண் எம்பி ஜஸ்கவுர் மீனாவால் தாக்கப்பட்டேன். இது தொடர்பாக சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் பெண் என்பதாலும் என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குளிர்க்கால கூட்டத்தொடரிலும் ரம்யா உள்ளிட்ட 2 காங்கிரஸ் எம்பிக்கள் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக சபாநாயகரிடம் புகார் தெரிவித்திருந்தனர். ரம்யாவின் இந்த குற்றச்சாட்டை பாஜ மக்களவை கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அவையில் பேசுகையில், `‘பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் என் அருகே ஆக்ரோஷமாக வந்தனர். என் முகத்துக்கு அருகே பதாகைகளை வைத்தனர். அதில் இருந்து என்னை மீட்க பாஜ உறுப்பினர்கள் முயன்றார்கள். அப்போது அவர்களை காங்கிரசார் தள்ளிவிட்டனர். அவை மாண்பு கருதி காங்கிரசாரை நாங்கள் தாக்கவில்லை’’ என்றார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜ பெண் எம்பிக்களிடம், காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சில எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது பாஜ பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். பின்னர் ஸ்மிருதி இரானி அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களவையில் பாஜ பெண் எம்பிக்களிடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறான முறையில் நடந்து கொண்டனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கடந்த 3 கூட்டத்தொடரில் காங்கிரசார் குண்டர்கள்போல் செயல்பட்டு நாடாளுமன்றம் செயல்பட இடையூறு ஏற்படுத்துகின்றனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* என்ன நடந்தது? சபாநாயகர் விளக்கம்
மக்களவை  பிற்பகல் 4.30 மணிக்கு மீண்டும் கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பாஜ மற்றும் காங்கிரஸ் இடையே நடைபெற்ற கைகலப்பு தொடர்பாக வேதனை தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், `‘அவையில் நல்லொழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இது அவை உறுப்பினர் ஒவ்வொருவரின் கடமையும் கூட. அவையில் நடைபெற்ற மோதல் சம்பவம் என்னை வேதனைக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலையில் கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்த நான் விரும்பவில்லை. ஒவ்வொரு உறுப்பினர்களும் அவையின்  மாண்பை காப்பது கடமை என உறுதியேற்கவேண்டும். இதற்காக மூத்த உறுப்பினர்கள் அவை அமளி இன்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே அவையை நாளை வரை  ஒத்திவைக்கிறேன்’’ என தெரிவித்தார்.

Tags : BJP ,Lok Sabha ,Congress ,MPs , Lok Sabha, female MPs, violation, BJP, Congress
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பாஜக...