×

370வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தேவையில்லை: 5 நீதிபதிகள் அமர்வு உத்தரவு

புதுடெல்லி: ‘‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு(370) ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற எந்த காரணமும் இல்லை’’ என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில் 370வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கை, 7 நீதிபதிகள் அடங்கிய மிகப் பெரிய அமர்வுக்கு மாற்ற எந்த காரணங்களும் இல்லை என்றது. உமர் மனு: காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டபின், முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இதை எதிர்த்து அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், ‘‘எனது சகோதரரால், பொது அமைதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை’’ என குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிடுகையில், ‘‘கைது தொடர்பான விஷயங்களுக்கு, மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும்’’ என கூறினார். ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் அரசு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு, மறுப்பு ஏதும் தெரிவிக்க விரும்பினால் அதையும் மனுதாரர் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் கூறியிருந்தார்.

* டெல்லி கலவர வழக்கு நாளை விசாரணை
டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் காலின் கான்சால்வ்ஸ், ‘‘டெல்லி கலவரத்தில், இன்னும் மக்கள் பலியாகி கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும், கலவரம் தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கை இவ்வளவு காலதாமதமாக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்க கூடாது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா போன்ற அரசியல்வாதிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்றார். இதன்பின் நீதிபதிகள் கூறுகையில், ‘‘டெல்லியில் அமைதி நிலவ வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம். எங்களுக்கும் வரைமுறைகள் உள்ளன. இதுபோன்ற அழுத்தங்களை நீதிமன்றத்தால் கையாள முடியாது. கலவரங்களை நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது. இது அரசு நிர்வாகத்தின் வேலை. நாங்களும் செய்திதாள்களையும், கருத்துக்களையும் படிக்கிறோம். இந்த மனுவை நாளை விசாரிக்கிறோம்’’ என்றனர்.

Tags : Judges Session: 5 Judges Session Order , 370th, repeal of section, case, 7 judges session, no need to change, 5 judges session
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...