×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 20ம் தேதி வெளியீடு: 6ம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் 6ம் தேதியும், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதியும் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த வாக்குச் சாவடி பட்டியல் கடந்த 27ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.நவாஸ்,  அதிமுக சார்பில் வெங்கடேஷ் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சம்பத்  உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதைத்தவிர்த்து வட்டார துணை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு மற்றும் உதவி வருவாய் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  

இதில் வாக்குசாவடி பட்டியல் தொடர்பாக இதுவரை 61 ஆட்சேபனைகள் வந்துள்ளதாகவும், அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார். மேலும் அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சேபனைகளை இன்றைக்குள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு வரும் 6ம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும்.  இதை தொடர்ந்து இந்த பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.

இதன் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வரும் 7ம்தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 20ம்தேதி அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும்.

Tags : Draft Voter List , Urban , Local Elections, 20th, Issue
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...