×

திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மரணம் எதிரொலி திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு: இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதா?

சென்னை: திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தனர். இதையொட்டி திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகள் காலியானதாக தமிழக அரசு அறிவித்து, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த இரண்டு தொகுதியிலும் இன்னும் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. திருவொற்றியூர் எம்எல்ஏவாக இருந்த கே.பி.பி.சாமி (திமுக) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி (வியாழன்) மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 28ம் தேதி (வெள்ளி), குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்த இரண்டு திமுக எம்எல்ஏக்களின் மறைவு காரணமாக, தமிழக சட்டமன்றத்தில் திமுகவின் பலம் 98ஆக உள்ளது.திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏக்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் இந்த இரண்டு தொகுதியும் காலியாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு நேற்று கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இந்த தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்து இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக சத்யபிரதா சாஹு நேற்று தெரிவித்தார்.

வழக்கமாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அந்த தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளதால் இடைத்தேர்தல் நடைபெறாமலும் இருக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வழக்கமாக பொதுத்தேர்தல் நடத்த ஒரு ஆண்டு காலம் இருக்கும்போது ஒரு தொகுதி காலியானால் அந்த சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், தற்போது தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற ஒரு ஆண்டுக்கும் அதிகமான கால அவகாசம் (14 மாதம்) இருப்பதால் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும், இதுபற்றி இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம்தான் எடுக்கும்” என்றார்.

Tags : KPP Sami ,DMK ,death ,Kattavarayan Thiruvottiyur DMK MLAs ,KPP Swami ,Kathavaran , DMK MLAs, KPP Swami, Kathavaran's death, by-election, likely
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்