×

அதிகாரிகளின் ஆசியுடன் புதிய வழித்தடங்கள் அமைத்து அள்ளி செல்கின்றனர்: கலியாவூர் தாமிரபரணியில் `கட்டுக்கடங்காத’ மணல்கொள்ளை

தூத்துக்குடி: கலியாவூர் தாமிரபரணி ஆற்றில் ஜேசிபி மூலம் புதிய வழித்தடங்களை உருவாக்கி மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 115 லோடு மணல் கடத்தப்படுகிறது. இதனை வருவாய் மற்றும் காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் எடுத்து பைப்லைன்கள் மூலம் தூத்துக்குடி மாநகர பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறது. தற்போது கலியாவூரில் உள்ள தாமிரபரணியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய உறைகிணறுகள் மூலம் தான் குடிநீர் எடுக்கப்பட்டு 4வது பைப்லைன் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த உறைகிணறுகளை சுற்றிலும் கடந்தாண்டு இறுதிவரையில் சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த பருவமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் அதிகமணல் வளம் மீண்டும் உருவானது. கடந்த ஒரு மாதமாக தாமிரபரணியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் மணல் மாபியாக்கள் மீண்டும் கைவரிசை காட்டத்துவங்கியுள்ளனர். வல்லநாடு, முறப்பநாடு உள்ளிட்ட பல பகுதியில் மணல் கொள்ளைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மணல் மாபியாக்கள் கலியாவூர் பகுதியில் இரவில் ஜேசிபி மூலம் புதிய வழித்தடங்களை உருவாக்கி லாரி லாரியாக மணல் கடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கலியாவூரில் மாநகராட்சி குடிநீர் உறைகிணறு பகுதிகளை சுற்றிலும் இரவு முதல் அதிகாலை வரை 4 முதல் 5 ஜேசிபிகள் வைத்து மணல் கொள்ளை ஜரூராக நடந்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 115 லோடுகள் லாரிகளில் கடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில முக்கிய சாலைகளில் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஓரிரு வழிகளில் மட்டுமே தற்போது கடத்தி செல்லப்படுகிறது. இதற்காக காவல்துறையின் சிசிடிவி கேமராக்கள் கூட பழுதாக்கப்பட்டுள்ளன. மணல் கடத்தலை கண்டுகொள்ளாத நெல்லை. தூத்துக்குடி போலீசாருக்கு பெரும் கவனிப்பும், தடுக்க முயன்றுவரும் ஒரு சில போலீசாருக்கு உடனடியாக அயல்பணியும் வழங்கிடும் நிலையில் பெரிய அதிகாரிகளும் இதற்கு துணை நிற்கின்றனர். 4வது பைப்லைன் உறைகிணறு அமைந்துள்ள பகுதியில் 15 முதல் 25 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் உறைகிணறு வற்றும் நிலை உள்ளது. இந்த நீராதாரத்தை நம்பியே தூத்துக்குடி மாநகர் உள்ளதால் இந்தாண்டின் துவக்கத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கியுள்ளது. தற்போது 3, 4 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் குடிநீர் இம்மாத இறுதிக்குள் படிப்படியாக குறையும் நிலை உருவாகி வருகிறது. மணல் கொள்ளை தொடருமானால் மாநகராட்சிக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும். எனவே கொடிகட்டி பறக்கும் மணல் கொள்ளையை தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

விழிபிதுங்கும் அதிகாரிகள்

தாமிரபரணி மணல் கொள்ளையில் நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த 5 முக்கிய புள்ளிகள் கோலோச்சி வருகின்றனர். இவர்கள் ஆற்றுமணலை மட்டுமல்லாமல் ஆற்றங்கரையோரமாக உள்ள தனியார் பட்டா நிலங்களுக்குள்ளும் புகுந்து அள்ளி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மணல் கொள்கைக்கு உடந்தையாக இருப்பதா அல்லது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதா என்ற மனநிலையில் பலதுறை அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

லட்சங்கள் வாரியிறைப்பு

சமீபத்தில் தன்னை சரியாக கவனிக்காத மணல் மாபியாவிற்கு சொந்தமான ஒரு லாரியின் கண்ணாடியை காக்கிசட்டை அணிந்த காவலர் ஒருவரே உடைத்துள்ளார். அதன்பின்னர் நடந்த அதிகாரிகள் பஞ்சாயத்தில் கணிசமான தொகையை இழந்த அந்த நபர், மீண்டும் அதே பகுதியில் பணி வாங்கி தற்போது மணல் கடத்தல் கும்பலுடன் மீண்டும் நெருக்கமாக உள்ளாராம். இந்த மணல் கடத்தல் கும்பல் 12 மணி நேர மணல் வேட்டைக்கு நாளொன்றுக்கு சர்வ சாதாரணமாக சில லட்சங்களை வாரியிறைத்து வருகிறதாம். இரவுநேரத்தில் மணல் கொள்ளைக்காக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் புதிய பாதைகளை உருவாக்கும் கும்பல் காலையில் திரும்பும்போது அந்த பாதைகளை வேறுநபர்கள் பயன்படுத்திவிடாத வகையில் அழித்துவிட்டு வருகிறது என அந்த பகுதியை சேர்ந்த பலர் உயிர் பயத்துடன் தெரிவிக்கின்றனர்.

Tags : routes ,Kaliyavur ,government , New Routes, Kaliyavur, Tamraparani, Sand Loot
× RELATED தெற்கு ரயில்வேயின் 25 வழித்தடங்களில்...