சித்திரை திருவிழா தேர்கள் மாசி வீதிகளில் ஓடுமா?..தோண்டிய பள்ளங்களை மூட முடியாமல் திணறல்

மதுரை: மதுரை சித்திரை திருவிழா நெருங்கும் நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டத்திற்கு மாசி வீதிகள் தயாராகவில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் மாசி வீதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது வரை மூடப்படாமல் உள்ளன. புகழ் பெற்ற மதுரை சித்திரை பெருந்திருவிழா ஏப்.25ல் மீனாட்சி அம்மன் கோயிலில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. அன்று முதல் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுவாமி வீதி உலா நடைபெறும். மே 4ல் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். அன்று இரவு பூப்பல்லக்கு, உச்சகட்டமாக மே 5ல் மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. 4 மாசி வீதிகளிலும் ஒரே நேரத்தில் 2 பெரிய தேர்கள் வலம் வரும் என்பதால், அந்த வீதிகள் முன்கூட்டியே சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது  திருவிழா நெருங்கி வரும் நிலையில் அந்த வீதிகளில் ஸ்மாரட் சிட்டி பணிகளுக்காக தோண்டி உருக்குலைந்து கிடக்கின்றன. மூன்றரை அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு வீதியின் நடுவில் தோண்டிய பள்ளம் இன்னும் மூடப்படாமல் அப்படியே கிடக்கிறது. அங்குள்ள கடைகளுக்கு பள்ளங்களை தாண்டி. பலகையில் ஏறித் தான் நுழைய முடியும். முக்கியமாக, மாசி வீதிகளில் தோண்டிய பள்ளங்களை மூட முடியாமல் திணறும் நிலை நீடிக்கிறது. முன்கூட்டியே திட்டமிடாமல் தேரை இழுத்து நடுரோட்டில் விட்ட கதையாக நிற்கிறது.

கோவில் நிர்வாகம் திருவிழா, தேரோட்டத்தை நினைவூட்டி, மந்தகதியில் நடக்கும் மாவீதி பணிகளை விரைவாக முடித்து தேராட்டத்திற்கு தயார்படுத்தும் படி மாநகராட்சிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளது. ‘‘அதற்குள் பணிகளை முடித்து விடுவோம்’’ என்று மாநகராட்சி மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளது. தேரோட்டத்தின் போது ஏற்படும் சிக்கல்களை அதிகாரிகள் சீர்தூக்கி பார்க்கவில்லை என்கின்றனர் பக்தர்கள். ஏனென்றால் 2 தேர்களின் சக்கரங்களும் தேக்குமரத்தில் இருந்த காலத்தில் 4 மாசி வீதிகளில் இழுக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும் நிலைக்கு வர முடியாத தடங்கல் இருந்தது. தற்போது தேக்குமர சக்கரங்கள் மாற்றம் செய்யப்பட்டு, இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தேர்களின் எடையை பல டன் அதிகரிக்க செய்துள்ளது. இதற்காக மாசி வீதிகள் அந்த தேர்களை தாங்கும் பலம் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே தற்போது தோண்டி கிடக்கும் பள்ளங்களை மூடினாலும், தேரோட்டத்திற்கு முன் கான்கிரீட் இறுகி பலம் பெற வேண்டும். அம்மாதிரி பலம் பெற்று விட்டால் சிக்கல் இல்லை. லேசாக பலம் இழந்து இருந்தாலும் தேர் சக்கரங்கள் பதிந்து விடும் அச்சம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே மந்த நிலையிலுள்ள மாசி வீதி பணிகள் தேரோட்டத்திற்கு முன் சீராகி பலம் பெற்று விடுமா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Related Stories:

>