×

டெல்லி கலவரம் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை..இதற்காக பாஜக இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: டெல்லி கலவரம் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் வடகிழக்கு டெல்லியில் ஜாப்ராபாத், சீலம்பூர், சாம்பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. கிட்டதட்ட 4 நாட்களுக்கும் மேலாக நீடித்த வன்முறையில் பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கண்ணில் பட்டதையெல்லாம் வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர்.

இந்த கலவரத்தில் இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கலவரத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உளவுத்துறையின் படுதோல்வியை கலவரத்திற்கு காரணம் என்றும் போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை எனவும் பல்வேறு  விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி கலவரம் திட்டமிட்ட இனப்படுகொலை என குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த இனப்படுகொலைக்காக பாஜக இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தைக் கைப்பற்றுவோம் என்று வெட்கமே இல்லாமல் பேசி வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் நடத்திய பேரணியில் பங்கேற்ற பாஜகவின் கோலி மாரோ(துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்) என கோஷம் எழுப்பியுள்ளனர். கொல்கத்தாவில் கோலி மாரோ கோஷங்களை எழுப்பிய 3 பேரை கைது செய்திருக்கிறோம். இப்படியான கோஷம் எழுப்பியவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, முழக்கங்களை எழுப்பிய பாஜக தலைவர்கள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Delhi ,Mamata Banerjee ,BJP , Mamta Banerjee, Delhi, riots, BJP, genocide
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்